சிம்பாவேயில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண தெரிவுகாண் தொடரின் சுப்பர் 6 தொடர் நிறைவடைந்துள்ளது. இலங்கை அணி முதல் சுற்றில் சகல போட்டிகளிலும் வெற்றிகளை பெற்றுக் கொண்டது. இரண்டாவது சுற்றான சுப்பர் 6 தொடரின் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த தொடரில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தோல்விகளை சந்திக்காத அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. உலகக்கிண்ண தொடருக்கும் தகுதி பெற்றுவிட்டது.
இன்று(07.07) மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 08 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 243 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் கேசி கார்டி 87 ஓட்டங்களையும், ஜோன்சன் சார்ள்ஸ் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஷண 4 விக்கெட்களையும், டுஷான் ஹேமந்த 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 2 விக்கெட்களை 44.2 ஓவர்களில் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் பத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களையும் டிமுத் கருணாரட்ன 83 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 190 ஓட்டங்களை பெற்றனர். பத்தும் நிஸ்ஸங்க இந்த தொடரில் இரண்டாவது சதத்தையும் அவரின் மூன்றாவது சதத்தையும் பெற்றுக் கொண்டார்.