‘என் பதவி எனக்கு மீண்டும் வேண்டும்’ – முஜிபர் ரஹ்மான்!

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் முஜிபர் ரஹ்மான் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் பெறும் நோக்கில் நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் நடத்தப்படாவிட்டால் தாம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது குறித்து தனது வழக்கறிஞர்களுடன் ஏற்கனவே ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தமது பதவியை இராஜினாமா செய்ததாகவும் உள்ளுராட்சி மன்ற தெப்போது தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில் போட்டியிட முன்வந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் வேலை மற்றும் சம்பளத்தை மீள வழங்குவது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதால், தமக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அது தொடர்பான சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எனினும், இவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி தற்போது ஏ.எச்.எம்.பௌசிக்கு வழங்கப்பட்டுள்ளதால், இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply