இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் அணிகளுக்கான தொடரில் இலங்கை A மற்றும் ஓமான் A அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 217 ஓட்டங்களினால் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளது. அதிக ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலே அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் இலங்கை A அணி வெற்றி பெற்று குழு A இல் முதலிடத்தை பெற்றுக் கொண்டது. குழு A இன் போட்டிகள் யாவும் நிறைவடைந்துள்ள நிலையில் பங்களாதேஷ் A அணி இரண்டாவது அணியாக அரை இறுதி வாய்ப்பை பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் A மற்றும் ஓமான் A அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளன.
இலங்கை A, ஓமான் A அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை A அணி 8 விக்கெட்களை இழந்து 258 ஓட்டங்களை பெற்றது. இதில் பசிந்து சூர்யபண்டா 60 ஓட்டங்களையும், சஹான் ஆராச்சிஹே 48 ஓட்டங்களையும் பெற்றனர். ஓமான் A அணியின் பந்துவீச்சில் அக்கியூப் இலியாஸ் 4 விக்கெட்களையும், அயான் கான், ஜே ஒடேரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய ஓமான் A அணி 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 42 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 3 விக்கெட்களையும், டுனித் வெல்லாலகே, ப்ரமோட் மதுஷன், லஹிரு சமரகோன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பங்களாதேஷ் A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் A அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றது. இதில் மஹமதுல்லா ஹசன் ஜோய் 100 ஓட்டங்களையும், ஷகீர் ஹசன் 62 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹமட் சலீம் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் A அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்றது. இதில் ரியாஸ் ஹசன் 78 ஓட்டங்களையும், பஹீர் ஷா 53 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரன்ஷிம் ஹசன் சகிப் 3 விக்கெட்களையும், ரகிப்புல் ஹசன், சோம்யா சர்கார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.