மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்
விமல் சொக்கநாதன் அவர்கள் லண்டனில் விபத்தொன்றில் சிக்கி அகால மரணமடைந்துள்ளார்.
இலங்கை வானொலியின் பெருமை மிகு படைப்பாளியான இவர், எண்ணிலடங்காத ஊடகவியாளர்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்.
நாடு கடந்தாலும் தம் தமிழ் மீது கொண்ட காதலால் ஊடகப் பணியை தொடர்ந்தார், உலக தமிழர்களின் மனங்கவர் ஒலிபரப்பாளரான இவரது குரலில், ‘செய்திகள் வசிப்பவர் விமல் சொக்கநாதன்’ என ஆரம்பிக்கும் செய்திகளை கேட்க தவறியவர்கள் அரிது.
அச்சு ஊடகத்திலும் வானொலிக் கலையின் தாற்பரியத்தை உணர்த்தியவர் என பெருமைகொள்ளும் அளவிற்கு அவரது ஊடக பணி அளப்பரியது.
உலகத் தமிழ் வானொலியான பிபிசி வானொலியை கட்டியெழுப்பிய ஊடக ஜாம்பவான்களுள் இவர் மிக முக்கியமானவர்.
இவரது ரசிகர்களுக்கும், இவரை நேசிப்பவர்களுக்கு இவரது பிரிவு பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது.
அவருடன் இணைந்து பிபிசி தமிழில் பணியாற்றிய இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் சீவகன் பூபாலரத்னம் இவ்வாறு தமது எண்ணங்களை பதிவிட்டுள்ளார்.
அந்த சிரித்த முகம் இன்னும் நெஞ்சில் நிற்கிறது. இன்று உங்கள் வட்ஸ்ஸப் ஒலிக்கிறது, பதிலில்லை. நேற்று மாலை டிராம் கார் விபத்தில் இறந்ததான தகவலை மனது உறுதி செய்ய மறுக்கிறது.
விமல் அண்ணா நீங்கள் மிகச்சிறந்த ஒலிபரப்பாளர் என்பதும் உங்கள் குரல் வலிமையும் அறிவிப்பின் போது அது காட்டும் நயமும் உலகறிந்த விடயம். அதுபற்றி அடுத்தவர்களை விட என்னால் சிறப்பாக ஏதும் சொல்லிவிட முடியாது. அவை பற்றி ஊரே அறியும்.
ஆனால், பிபிசி உலக சேவை அலுவலகத்தில் நாங்கள் சிலர் மாத்திரம் உணர்ந்த ஒன்று உங்கள் மொழிபெயர்ப்புத்திறன்.
ஆங்கிலத்தில் இருக்கும் ஒரு பிரதியை நீங்கள் தமிழில் மாற்றும் பாங்கு உன்னதமானது. மொழிபெயர்ப்பின் போது நீங்கள் சில சந்தர்ப்பங்களில் தேர்ந்தெடுக்கும் சொற்களை, இதுவெல்லாம் இவரின் மூளைக்குள் மட்டும் எப்படி வருகிறது என்று நாங்கள் அயர்ந்து நின்ற சந்தர்ப்பம் பல. அவ்வளவு தனித்துவம் மிக்கது உங்கள் மொழிபெயர்ப்பு. அது வெறுமனே word to word மொழிபெயர்ப்பாக மாத்திரம் அல்லாமல் மிகச்சிறந்த வானொலிக்கான தமிழ் பிரதியாகவும் உருவாகியிருக்கும். அது ஆங்கிலத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட பிரதி என்று சத்தியம் பண்ணிச்சொன்னாலும் யாரும் நம்ப முடியாத ஒரு தமிழ் மூலப்பிரதியாக அது அமைந்திருக்கும்.
சில சொற்கள் நீங்கள் அறிமுகம் செய்யும்போது புத்தம்புதுச் சொற்கள் போலவும் மறுபுறம் மிகவும் பரிச்சயம் மிக்க, அனைவருக்கும் இலகுவில் புரியும் சொற்களாகவும் காட்சிதரும். இதுவெல்லாம் ஒரு கலை.
அவ்வளவு ஏன், ஒரு பிரதியை ஒலிபரப்புக்காக நீங்கள் பிரித்து கோடுகள் இட்டு தயாரித்துக்கொள்வதிலும் ஒரு இங்கிதம் தெரியும். அதை நாம் பறித்து படிக்க வேண்டும் போல் தோன்றும். ஆனால், அதை உங்கள் குரலில் கேட்ட பிறகுதான், ஒரு விசப்பரீட்சையை செய்யத்தவறினோம் என்று எண்ணத்தோன்றும். அந்தப்பிரதிகள் உங்களுக்கானவை, உங்கள் குரலுக்கானவை.
“நான் ஒரு குறும்படம் இயக்கவேணும், நீர்தான் அதற்கான படப்புடிப்பை செய்து, எடிட்பண்ணித்தரணும்” என்று நீங்கள் கேட்டுக்கொண்டது இன்னும் என்காதில் ஒலிக்கிறது. பிபிசி தமிழ் தொலைக்காட்சிக்கான தயாரிப்புகளை நான் செய்ததைப்பார்த்து நீங்கள் கேட்டது அது. அது நடக்காமலேயே போய்விட்டது. ஆனால், எனக்கு ஊடகத்துறையில் நீங்கள் கொடுத்த சான்றிதழாக இந்த வார்த்தைகளை மனதில் பதித்துக்கொள்கிறேன்.
என்னைவிட எவ்வளவோ வயது மூத்தவர் நீங்கள். ஆனால், எந்த வித்தியாசமும் இல்லாமல் இறங்கிவந்து எங்களோடு பேசி மகிழ்விப்பீர்கள். சிலவேளைகளில் கொஞ்சம் விரசம் கலந்து எங்களோடு நீங்கள் பேசிய அங்கதங்கள் எங்களுக்கு மட்டுமானவை. பிரத்தியேகமானவை. அவற்றை என்றும் மனதில் உங்கள் நினைவுகளோடு சேமித்து வைத்திருப்போம். அவ்வப்போது நினைத்து சிரித்தும் கொள்வோம்.
“இசையும் கதையும்” மாத்திரமல்ல உங்கள் மொழிபெயர்ப்பு வல்லமையும் வானொலி பிரதி உருவாக்க வல்லமையும் எங்கள் மனதில் நிலைத்திருக்கும்….. உங்கள் சிரித்த முகத்தோடு.
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தவர்கள் மற்றும் அவரது அபிமானிகளுக்கு வீ மீடியா குழுமத்தின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.