கிளிநொச்சி அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டிக்கான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட செயலக நடப்பாண்டுக்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி தொடர்பான கலந்துரையாடல் இன்று (02.08) காலை 10.00மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட இக் கலந்துரையாடலானது, மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டியில் மாவட்ட செயலக, பிரதேச செயலக அணிகள் உள்ளடங்கலாக ஏனைய திணைக்கள அணிகளும் பங்குபற்றுகின்றன. இதன்படி 19 அணிகள் தகுதிபெற்றுள்ளதுடன், 13 வகையான விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளன.

இது குறித்த கலந்துரையாடலின்போது பொதுவான விதிகள், ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகளுக்கான நிபந்தனைகள், அணித்தெரிவு முறைகள், போட்டி ஒழுங்கமைப்பு போன்ற விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

இவ் விளையாட்டு போட்டி தொடர் மூலம் பல திணைக்களங்களின் உத்தியோகத்தர்களிடையே பரஸ்பர தொடர்புகளை உருவாக்குதல் மற்றும் உத்தியோகத்தர்களின் திறமைகளை இனங்காணல், அவர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும் குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நளாயினி இன்பராஜ், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் க.சி.கஜேந்திரன்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.ஸ்ரீபாஸ்கரன், உள்ளக கணக்காய்வாளர் நி.குமுதினி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் சி.ச.கிருஸ்ணேந்திரன், உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் மா.அருந்தவராணி, பிரதேச செயலகங்களின் நிர்வாக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்க தலைவர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், மாவட்ட செயலக கிளைத் தலைவர்கள், விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச்சங்க அங்கத்தவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Social Share

Leave a Reply