தென் சீனக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக் கப்பல் மீது சீனக் கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பிலிப்பைன்ஸ் இராணுவத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸின் நட்பு நாடான அமெரிக்காவும் இது தொடர்பான தனது கருத்தைத் தெரிவித்ததோடு, சீனாவின் இந்த ஆபத்தான செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இந்த தாக்குதலுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய ஸ்பிரிட்லி தீவுகள் உட்பட தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சீனா கூறுகிறது.
இருப்பினும், பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளும் இந்தப் பகுதியை உரிமை கொண்டாடுகின்றன. இதனால் இப்பகுதியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.