பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கிவரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் 17ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இத்தருணத்தில் அவர்களது சேவை தொடர வேண்டுமென ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், ஒரு சமூக நோக்குடன் இயங்கும் அமைப்பாகும்.
17ஆண்டுகளாக எவ்வித எதிர்பார்ப்பும் இலாபநோக்கமும் இன்றி மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சியடைய வேண்டுமென்ற ஒற்றை இலக்குடன் தமது சேவையை வெற்றிகரமாக முன்னெடுத்துவருகிறது.
ஆரம்ப கல்வியைக்கூட பெறமுடியாது பல மாணவர்களின் வாழ்க்கை இடைநடுவில் திசைத்திரும்புகிறது. அவர்களை போன்றவர்களுக்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சேவை உண்மையில் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.
இலவச கருத்தரங்குகளை நடத்துவது, மாதாந்த புலமைப்பரிசில் வழங்கல், தொண்டர் ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் திட்டம் மற்றும் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான மாதிரிப் பரீட்சை வினாத்தாள்கள் வழங்குவது என இவர்களது கல்விசேவை பரந்ததாகவுள்ளது.
ஆகவே மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.