இலங்கையை பிரதிநித்துவம் செய்து ஒலிம்பிக் போட்டிகள் வரை பளு தூக்கல் வீரர் சுதேஷ் பீரிஸ் இன்று(06.09) தனது ஓய்வை அறிவித்துள்ளார். 25 வருட காலமாக இலங்கையை பிரதிநித்துவம் செய்து பல போட்டிகளில் பங்குபற்றிய சுதேஷ் ஒலிம்பிக் சம்மேளனத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
நீர்கொழும்பு புனித மரியா கல்லூரியில் கல்வி கற்ற போது 11 வயது முதல் பளு தூக்கல் போட்டிகளில் பங்குபற்றி வந்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநித்துவம் செய்து பங்குபற்றியிருந்தார். பதக்கங்களை அவரால் வெற்றி பெற முடியவில்லை.
2006 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 69 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இலங்கைக்கான முதற் பதக்கத்தை வென்று கொடுத்தார். 2010 ஆம் ஆண்டு டெல்லி பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 62 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்ற சுதேஷ், 2011 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கான சம்பியன்ஷிப் போட்டிகளில் 69 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 2014 ஆம் ஆண்டு க்ளாஸ்க்கோ பொதுநலவாய போட்டிகளில் 62 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிபப்தக்கம் வென்றார்.
2016 ஆம் ஆண்டு மலேசியா பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 69 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இவர், அதே ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 62 கிலோ பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 2022 ஆம் ஆண்டு பொதுநலவாய தெரிவுப் போட்டிகளில் 73 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வெற்றி பெற்றார்.
இவர் இலங்கை வான்படையில் இணைந்து அவர்களுக்காக போட்டிகளில் பங்குபற்றி வந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டு முதல் ஜப்பான் சென்று அங்கும் பல போட்டிகளில் பங்கு பற்றி வருகிறார். அங்கு 2009, 2010, 2011, 1021, 2016 ஆம் ஆண்டுகளில் ஜப்பான் தேசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளார். தன்னை இலங்கையிலும் பார்க்க ஜப்பானில் உள்ளவர்களுக்கு அதிக தெரியுமெனவும், தான் போட்டிகளில் பங்குபற்றுவது தொடர்பில் தேடி அறிந்து கொள்கிறார்கள் எனவும் இந்த நிகழ்வில் சுதேஷ் கூறினார்.
தான் இலங்கையை பிரதிநித்துவம் செய்தவர் எனவும், ஜப்பானில் வாழ்ந்தாலும் இலங்கைக்கு பயிற்சிகளை வழங்க விளையாட்டுத்துறை மற்றும் பளு தூக்கல் விளையாட்டுக்கு பங்காற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தார்,
2005, 2006 ஆம் ஆண்டுகளில் 11 வயதான மாணவனாக 33 கிலோ கிராம் எடையுடன் காணப்பட்ட சுதேஷ் அப்போதைய பாடசாலை போட்டிகளில் சாதனைகளை முறியடித்த வேளையில் இவர் பெரியளவில் வருவார் என எதிர்பார்த்ததாக சுதேஷின் முதற் பயிற்சியாளர் ரஞ்சித் பெரேரா தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஒலிம்பிக் பதக்க வெற்றியாளரும், ஒலிம்பிக் வீரர்களது சங்க தலைவருமான ஸ்ரீயானி குலவன்ச கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அதேவேளை, ஒலிம்பிக் வீர வீராங்கனைகள் ஓய்வு பெற்ற பின்னர் வாழ்வாதாரத்துக்கு மிகவும் கஷ்டப்படுவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஒலிம்பிக் குழு மற்றும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
சுதேஷ் பீரிஸ் திறமையான வீரர் எனவும் அவர் ஓய்வு பெற்றாலும் இந்த விளையாட்டுக்காக தொடர்ந்தும் கைகொடுப்பர் எனவும் ஒலிம்பிக் சம்மேளன செயலாளர் மக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார். அத்தோடு எதிர்காலத்தில் குறிப்பாக 2026 ஆம் ஆண்டு அதிக பதக்கங்களை வென்று தரப்போவது பளு தூக்கல் விளையாட்டு எனவும், பளு தூக்கல் சம்மேளனம் அனுசரணையாளார்களை தேடி தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டுமெனவும், தாம் அதற்கு கைகொடுப்போம் எனவும் மக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.
பளுத்தூக்கல் சம்மேளன பிரதிநிதிகள், வீர வீராங்கனைகள், குடும்பத்தினர் உட்பட பலரும் சுதேஷ் பீரிஸின் ஓய்வு நிகழ்வில் கலந்து கொண்டனர்.