”மருத்துவ நிபுணர்களின் தட்டுப்பாடு உலகளாவிய சிக்கல்” – அமைச்சர் நிமல்

மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை என்பது இலங்கை மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினையல்ல என்றும், இது முழு உலகமே எதிர்கொள்ளும் ஒரு உலகளாவிய சிக்கல் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (09.09) தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2035ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் 12.9 மில்லியன் மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பியா, நியூசிலாந்து, கனடா, டென்மார்க், ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பெரும்பாலான நாடுகள் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் இவ்வாறான நாடுகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வது வழமையான நடைமுறை எனவும், அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இலங்கையில் அதனை நிறுத்துவதற்கு வழியே இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை எங்களால் தடுக்க முடியாது எனவும், அவர்களது கடவுசீட்டை தடை செய்ய முடியாது எனவும், மனித உரிமைகள் அடிப்படையில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை எங்களால் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரோ அல்லது அரசாங்கமோ எதுவும் செய்ய முடியாது என தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply