கொழும்பு டேர்டன்ஸ் வைத்தியசாலையின் “Alfred House Wing” புதிய கட்டிடம் திறப்பு!

இலங்கையின் முதலாவது தனியார் வைத்தியசாலையாக மாத்திரமின்றி ஒரு நிறுவனமாக டேர்டன்ஸ் வைத்தியசாலையினால் நாட்டுக்கு கிட்டும் கௌரவமே அவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உலகின் தொழிநுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப முன்னோக்கிச் செல்லுமாறு டேர்டன்ஸ் வைத்தியசாலையிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை இலங்கை அணுக வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். புத்தாக்கம் மற்றும் தொழிநுட்ப சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை நிறுவ எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு டேர்டன்ஸ் வைத்தியசாலையின் “அல்பிரட் ஹவுஸ் விங்” என்ற புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் வரலாறு, பயணப்பாதை குறித்து எழுதப்பட்ட ” Journey of Care ” (Coffee Table Book) புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று (12.09) உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். டேர்டன்ஸ் மருத்துவமனையின் முன்னேற்றம்.

கொழும்பு டேர்டன்ஸ் வைத்தியசாலையின் "Alfred House Wing" புதிய கட்டிடம் திறப்பு!

இலங்கையின் நிர்மாணத் துறைக்கும் சுகாதாரத் துறைக்கும் டேர்டன்ஸ் வைத்தியசாலையின் தனித்துவமான பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிர்மாணத் துறையில் இருந்து சுகாதார சேவைக்கு மாறும் முயற்சிகளில் டேர்டன்ஸ் வைத்தியசாலை சவால்களுக்கு மத்தியிலும் வெற்றிபெற்றுள்ளமைக்கும் பாராட்டு தெரிவித்தார். அதேபோல் புதிய தொழில்நுட்பங்களை சுகாதார துறையில் அறிமுகப்படுத்துவதற்கான டேர்டன்ஸ் வைத்தியசாலையின் அர்பணிப்பையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தனியார் வைத்தியசாலைகளுக்கு இணையாக அரச வைத்தியசாலைகளின் முகாமைத்துவத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, செலவைக் குறைக்கும் முயற்சிகள் மூலம் சுகாதார துறையில் மற்றுமொரு முதலீட்டை செய்ததற்காகவும் டேர்டன்ஸ் வைத்தியசாலையை பாராட்டிய ஜனாதிபதி, எதிர்வரும் சில வருடங்களில் அரச வைத்தியசாலைகளின் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நவீன தொழிநுட்பத்துடன் வேகமாக மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் மருத்துவத்துறை தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவத்துறையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் புதிய கண்டுபிடிப்புகளை கருத்திற்கொண்டு, இந்நாட்டு சுகாதார துறையில் மேற்கொள்ள வேண்டிய மேம்படுத்தல்களுக்கான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கடந்த தசாப்தத்தில் சுகாதாரத் துறையில் எட்டப்பட்ட முன்னேற்றம், முன்னைய தலைமுறையினர் கண்ட முன்னேற்றத்தை விஞ்சியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அஜித் துடாவே உட்பட டேர்டன்ஸ் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் முன்மாதிரியை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி விக்ரமசிங்க, இந்த சிறந்த நிறுவனத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களித்த முழு வைத்தியசாலை குழுவிற்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

புதிய கட்டிடமான “Alfred House Wing” திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், டேர்டன்ஸ் வைத்தியசாலையின் தலைவர் அஜித் துடாவே, “Journey of Care” புத்தகத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இதன்போது கையளித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, டேர்டன்ஸ் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் தலைவர் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version