இயலாமையினால் இதொகா, ஜனநாயக மக்கள் முன்னணியினை சீண்டுகிறது

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மிகத்தெளிவாக, இரண்டு கைகளும் தட்டினால்தான் சப்தம் வரும். எதிரணியில் இருந்து நாம் பணி செய்கிறோம். ஆளும்கட்சியில் இருந்து நீங்கள் பணி செய்யுங்கள். முரண்பாடு தேவையில்லை. மாத்தளை, இரத்தினபுரி தோட்டங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சர் போனதை நாம் பாராட்டுகிறோம். ஆனால், அதனால் பிரச்சினை முடியவில்லை. முடியாததால்தானே மீண்டும், மீண்டும் தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன? என ஜனனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர் முருகேசு பரணீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பாராளுமன்றத்தில் நமது கட்சி தலைவர் குரல் எழுப்பிய பிறகுதான் பெயரவிலாவது மாத்தளை துணை முகாமையாளர் கைது செய்யப்பட்டார். மேலும், நமது மக்கள் பிரச்சினை தொடர்பில், நாம் அரசுக்கு வெளியிலிருந்தபடி,  பொலிசாரின், அமைச்சரின், ஜனாதிபதியின், பாராளுமன்றத்தின், நாட்டின், நேரடி கவனத்துக்கு கொண்டு வந்து அழுத்தம்  கொடுக்கிறோம். நீங்கள் அரசுக்கு உள்ளே இருந்தபடி,  அழுத்தம் கொடுங்கள், என்றும் பகிரங்கமாக சொல்லிய பிறகும்கூட, இதொகாவுக்கு அரசியல் புரியவில்லை. அரசுக்கு உள்ளே இருந்து அழுத்தம் கொடுப்பதைவிட அவர்களுக்கு எங்களை அடித்து அரசியல் செய்ய ஆசை”
என ஜனநாயக மக்கள் முன்னணியை விமர்சித்து, இதொகா விடுத்துள்ள அறிக்கை தொடர்பில், பரணிதரன் முருகேசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அந்த கட்சியில் இருப்பதாக சொல்லப்படும் இளைஞர் அணி என்ற பெயரை பயன்படுத்தி எங்கள் தலைவரை மோசமாக விமர்சித்தார்கள். இந்நிலையில் எமது சமூக ஊடக அணி இதொகாவை திருப்பி அடித்தது. இயலாமை காரணமாக இதொகா இனியும் இதை தொடருமானால், நாமும் பதிலடி தருவோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினருமான பரணிதரன் முருகேசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை..

இதொகாவின் பிரச்சினை எங்களுக்கு புரிகிறது. அங்கே இருந்து என்ன செய்தாலும், எதுவும் காத்திரமாக நடப்பதில்லை. எயார்போர்ட்டும் இல்லை. ஹார்பரும் இல்லை. பிளேனும் இல்லை. கப்பலும் இல்லை. இருந்த பஸ்சும் இலை. காணியும் இல்லை. வீடும் இல்லை. ரோடும் இல்லை. இதுதான் இயலாமை. இதற்காக எங்களை திட்டி பேசுவதால், ஆகப்போவதும் எதுவும் இல்லை.

 அதனால்தான் எங்கள் தலைவர் மனோ கணேசன், ஒருவர் காலை ஒருவர் இழுக்காமல், இருக்கும் இடத்தில் இருந்தபடி, நாம் இருசாராரும் ஒரு புரிந்துணர்வுடன் செயற்படுவோம் என்று சொன்னார். அதை புரிந்துக்கொள்ளும் பக்குவமும் இதொகாவுக்கு இல்லை.

இந்நாடு முழுக்க தமிழ் மக்கள் துன்புறும் போதெல்லாம் குரல் கொடுத்து, நேரடியாக களத்தில் இறங்கும், ஒருநாளும் விலைபோகாத, முதுகெலும்புள்ள தமிழ் அரசியல் தலைவர் மனோ கணேசன் என்பது நாடறிந்த சங்கதி. “அறிக்கை அரசியல் செய்கிறார்”, களத்திற்கு போவதில்லை”, “முதுகெலும்பு இல்லை” என மறைமுகமாக எங்கள் தலைவர் மனோ கணேசனை குறித்து அநாகரீகமாக கருத்து கூற இதொகாவுக்கு உண்மையில் மனசாட்சி இருக்கிறதா? என கேட்க விரும்புகிறேன். எங்கள் தலைவரின் தனிப்பட்ட நண்பர் மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் ஆத்மா, இந்த சிறுவர்களை மன்னிக்குமா? எனவும் கேட்க விரும்புகிறேன்.   

 இரண்டே இரண்டு தோட்டங்களுக்கு சென்று வந்து விட்டு, அதிலும் அதனால் எதுவும் நடக்க வில்லை என்ற நிலையிலும், இந்த இதொகாவினர் நடத்தும் அலப்பறை தாங்க முடியவில்லை. அப்படியும்கூட நாம் அதை பெருந்தன்மையாக பாராட்டி, எங்கள் வேலையை நாம் செய்கிறோம், உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள் என்றுதான் நாம் கூறுகிறோம்.   

 ராஜப்பக்ச கொலைக்கார அரசில் ஒருபோதும் அங்கம் வகிக்காத, எமது மக்கள் கொல்லப்பட்டு, கடத்தப்பட்ட போது களத்தில் நின்று உயிர் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் நேரடியாக போராடிய, ஞானசாரருடன் நேரடியாக மோதிய, எமது இனம் இழிப்பெயரால் அழைக்கப்பட்ட போது நேரடியாக பொங்கி எழுந்த, நாடாளுமன்றத்தில் நேரடியாக தொடர் விவாதம் நடத்துகின்ற, தேசிய, சர்வதேசிய அரங்குகளில் எமது அந்தஸ்தை நேரடியாக உறுதிப்படுத்துகின்ற, ஈழத்தமிழ் சகோதரர்களுடன், முஸ்லிம் சகோதரர்களுடன் தோழமையுடன் நேரடியாக களத்தில் நிற்கின்ற ஒரு தலைவரை கொண்ட எமது கட்சியின் மீது, கூட்டணியின் மீது சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி போய், விளையாடும்படி இதொகாவிடம் கூறி வைக்கிறோம்.

Social Share

Leave a Reply