சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை இன்று சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் வெளியிடடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்து, பெப்ரவரி 04 ஆம் திகதி இந்த தொடர் நிறைவடையவுள்ளது. 41 போட்டிகளும் கொழும்பில் பகல் போட்டிகளாக நடைபெறவுள்ளன.
முதல் சுற்றில் 16 அணிகள் 4 குழுக்களில் மோதி முதல் 3 இடங்களை பெறும் அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகும். 12 அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவற்றுக்குள் மோதி முதலிரு இடங்களை பெறுமணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும். குழு A இன் மூன்று அணிகளும், குழு D இன் மூன்று அணிகளும் இரண்டாம் சுற்றில் ஒரே குழுவிலும், குழு B இன் மூன்று அணிகளும், குழு C இன் மூன்று அணிகளும் இரண்டாம் சுற்றில் ஒரே குழுவிலும் இடம் பிடிக்கவுள்ளன. அரை இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறுமணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
கடந்த உலகக்கிண்ண தொடரில் முதல் 11 இடங்களை பெற்ற முழு அங்கததுவ நாட்டு அணிகள் 11 நேரடியாக தெரிவு செய்யபப்ட்டன. மீதமான 5 இடங்களுக்கு வலய அடிப்படையில் நடைபெற்ற தெரிவுகாண் போட்டிகளில் வெற்றி பெற்ற நியுசிலாந்து, ஸ்கொட்லாந்து, அமெரிக்கா, நமீபியா, நேபாளம் ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டன.
கொழும்பு ஆர்.பிரேமதாச, பி.சரா ஓவல், NCC, CCC, SSC ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதற் போட்டியில் இலங்கை அணி சிம்பாவே அணியினை சந்திக்கின்றது. இரண்டாவது போட்டியில் நடப்பு சம்பியனான இந்தியா அணி பங்களாதேஷ் அணியை சந்திக்கவுள்ளது.
