உலகக்கிண்ண தொடரில் பங்குபற்றவுள்ள இந்தியா அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் இணைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பிடித்திருந்த அக்ஷர் பட்டேல் ஆசிய கிண்ண தொடரில் உபாதையடைந்திருந்தார். அவரின் இடத்துக்கே அஷ்வின் தற்போது சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடர்களில் இந்தியா அணிக்காக விளையாடியிருத்த ரவிச்சந்திரன் அஷ்வின், 2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் இடம்பிடித்திருக்காவில்லை.
மூன்று இடதுகர சுழற்பந்துவீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் யுஸ்வேந்ரா செஹால், அஷ்வின் இருவரில் ஒருவர் சேர்க்கப்படாமை தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் அக்ஷர் பட்டேல் உபாதையடைந்தமை அஷ்வினுக்கு அணியில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அவுஸ்திரேலியா அணியுடன் அஷ்வின் , வொஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் இணைக்கப்பட்டு சோதிக்கப்பட்ட நிலையில் அஷ்வின் அதிகமாக ஓட்டங்களை வழங்காமல் பந்துவீசி இரண்டு போட்டிகளில் 04 விக்கெட்களை கைப்பற்றியமை அவருக்கு வாய்ப்பை இலகுபடுத்தியது.
சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் தொழில் நுட்பக்குழுவின் அனுமதியின்றி அணியில் மாற்றங்களை செய்யக்கூடிய இறுதி நாள் இன்றாகும். அதன்படி இந்தியா அணி இன்று தனது இறுதி அணையை அறிவித்துள்ளது.
அணி விபரம்
ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி, ஷர்டூல் தாகூர், ரவிச்சந்திரன் அஷ்வின், சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன்