முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதிகளாக கடமையாற்றிய காலங்களில் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு பாதுகாப்பு துறை மூலமாக பணம் செலுத்தப்பட்டது என அந்த அமைப்பின் முன்னாள் ஊடக பேச்சாளர் ஆஷாட் மௌலானா தமக்கு தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
30 இலட்சம் ரூபா முதல் 60 இலட்சம் ரூபா வரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு செலுத்தப்பட்டதாகவும், போரின் கடைசிப் பகுதியில் இந்த பணம் செலுத்த ஆரம்பிக்கப்பட்டதாகவும் மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் அது குறைக்கப்பட்டதாகவும், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் அது மேலும் குறைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள மௌலானா பாரிய தொகை குறைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஐரோப்பாவுக்கு சென்று அரசியல் தஞ்சம் கோரியதன் பின்னரே இந்த தகவல்களை தமக்கு கூறியதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
சனல் 04 வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பிலான ஆதாரங்கள் எனும் ஆவணப்படத்தை ஆஷாட் மௌலானாவின் சாட்சியங்களை வைத்துக்கொண்டே வெளியிட்டிருந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் கொடுப்பனவுக்காக வழங்கப்பட்ட பட்டியலில் போலிலிப் பெயர்கள் காணப்பட்டதாகவும், உண்மையில் 15 பேரே உண்மை பட்டியலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ள மௌலானா மட்டக்களப்பில் மூன்று இடங்களில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாகவும், பிள்ளையானின் பிரதிநிதியாக அந்த கொடுப்பனவுகளை மௌலானா பெற்று பிள்ளையானுக்கு வழங்கியதாகவும் மேலும் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 பேருக்கான பணம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் அடங்கிய இதர செலவுகளுக்கு பணத்தை பெறுதல் என்பனவுமே குறிக்கோளாக காணப்பட்டது. அத்தோடு பாதுக்காப்பு துறையினருக்கு போலியான பெயர்பட்டியல் வழங்கப்பட்டமை தொடர்பில் அவர்களுக்கு தெரியாது எனவும் மௌலானா கூறியுள்ளார். இந்த குற்றசாட்டுகள் உள்ளடக்கப்பட்ட ஆவணங்கள் கொழும்பிலுள்ள இராஜதந்திர அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் மௌலானாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வழங்கிய ஆதரவுக்கு அரசாங்கங்கள் பணம் வழங்கின. இதில் எந்த இரகசியமும் இல்லை என பாரளுமன்றத்தில் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்ததாக டெய்லி மிரர் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும் உரித்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.