”யுத்தம் இல்லாவிட்டாலும், இனவாததிற்கு குறைவில்லை” – மனோ கணேசன்

மலையகத்தில் தமிழரின், குறிப்பாக பெருந்தோட்ட வதிவாளரின் பிரதான பிரச்சினை, காணியுரிமையை கோரி பெறுவது எனவும் வடகிழக்கில் தமிழரின் பிரதான பிரச்சினை, இருக்கும் காணி உரிமையை பாதுகாத்துக்கொள்வது என தமிழ் முன்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (02.10) இடம்பெற்ற உள்ளக கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இவ்விரண்டிலுமே, பேரினவாதம்தான் தடையாக இருக்கிறது. இதை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். இன்று யுத்தம் இல்லை. ஆனால், இனவாதம் நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது.

மலையகத்தில் இன்று, “காணியுரிமை” பேசு பொருளாக்கப்பட்டுள்ளது. அதை நாம் கவனமாக கையாள்கிறோம். சிலர் சொல்வதை போல், “எடுத்தேன், கவிழ்த்தேன்”, என இதை உணர்ச்சிவசப்பட்டு கையாள முடியாது. எங்காவது, எவராவது, ”மலைநாட்டு பூமி சிங்கள மக்களின் பாரம்பரிய பூமி” என்ற பழைய கதையை கிளப்பி விட இடம் கொடுக்க கூடாது.

ஒருசில தனிநபர்களுக்கு ஒருசில ஏக்கர் நிலம் பெறுவது சுலபம். ஆனால், இங்கே தேவை என்பது பாரியது. இது சுமார் இரண்டு முதல் இரண்டரை இலட்சம் குடும்பங்களுக்கு வீடு கட்டி வாழ, வாழ்விட காணியும், பயிர் செய்து வாழ, வாழ்வாதார காணியும் பெற வேண்டும். ஆகவே இதன் பின்னுள்ள கனமான பொறுப்பை அனைவரும் உணர வேண்டும்.

நாம் இன்று பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை என்பதன் நியாயப்பாட்டை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களே, சமூக தலைவர்களே ஏற்றுக்கொள்ளும் இடத்திற்கு மெல்ல கொண்டு வருகிறோம். பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உடைமையாளர் ஆக்குவதாக எதிர்கட்சி தலைவரை பலமுறை சொல்ல வைத்துள்ளோம். இது தொடர்பில் நாம் அவருடன் விரைவில் ஒரு ஒப்பந்தமும் செய்ய உள்ளோம். சுருக்கமாக சொல்வதானால், நாம் பொறுப்புடன் காய் நகர்த்துகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் காணி உரிமையை பாதுகாத்து கொள்வது தொடர்பிலும் இங்கு கருத்து பரிமாறப்பட்டுள்ளதுடன், மறைந்து நிற்கும் பிரதான பிரச்சினையும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version