இலங்கையின் சுகாதாரத் துறையின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (11.10) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாட்டில் நீண்டகாலமாக மருந்து தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது போன்ற பிரச்சினை நிலவி வருவதுடன், கொடுப்பனவுகள், மருத்துவமனைகளில் பொருத்தமற்ற பணிச்சூழல் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக 1,500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது இலங்கையின் சுகாதாரத் துறையை கடுமையாகப் பாதிக்கும் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இலவச சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களை பாதுகாக்குமாறு கோரி இன்று (11.10) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்துவதற்கு GMOA தீர்மானித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக GMOA தெரிவித்துள்ளது.