நசீரின் இடத்திற்கு தெரிவானார் மௌலானா!

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் வெற்றிடமான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தாம் தெரிவுசெய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

நசீர் அஹமட் SLMC யில் இருந்து நீக்கப்பட்டது சட்டப்பூர்வமானது என்று கடந்த வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெற்ற உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பைத் தொடர்ந்து தனது நியமனம் இடம்பெற்றுள்ளது.

நசீர் அஹமட் தனது அரசியல் கட்சி தொடர்பை மாற்றிக் கொண்டதையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கும் முடிவை SLMC முன்னெடுத்திருந்தது.

இது தொடர்பில் வழக்கு பதிவு செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு சார்பாக கிடைக்கப்பெற்ற உச்ச நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

SLMC உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா கடந்த தேர்தலில் SLMC இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் வரிசையில் அடுத்ததாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட SLMC உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, அரசியல் அமைப்பு, அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளை வலுப்படுத்துதல், நாகரீகமான, ஒழுங்கான ஜனநாயகத்தைப் பேணுவதற்கான கோட்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் மிக முக்கியமாக நமது அரசியலமைப்பின் முழுமையான தன்மையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், மட்டக்களப்பு தொகுதி மக்களுக்கும், எனது சக குடிமக்களுக்கும் மற்றும் இலங்கைக்கும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய உத்தேசித்துள்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply