பாராளுமன்ற ஆலோசனை குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் தானும் தேர்தல் முறைமை திருத்தத்திற்கு விருப்பம் தெரிவித்ததாக அரசாங்கம், ஊடகங்கள் ஊடாக போலிச் செய்தியை பரப்பி வருகின்றன என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவ்வாறான எந்தவொரு தீர்மானத்திற்கும் தான் உடன்படவில்லை என்றும், பிரதமர் தலைமையிலான அரசாங்கம் அப்பட்டமான பொய்களைக் கூறி தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19.10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பட்டதாரிகள் சிலரின் வேலை வாய்ப்பு பிரச்சினைகள், கிராம உத்தியோகத்தர்கள் சிலரினது பிரச்சினைகள் மற்றும் ஆட்சேர்ப்பு பிரச்சினைகள் போன்ற பல விடயப்பரப்புகளில் நடந்த அமைச்சு சார் ஆலோசனை குழுக்களிலே தான் கலந்து கொண்டதாகவும், இதன் பின்னர் தாம் வெளியேறியதாகவும், அவ்வாறு வெளியேறியதன் பிற்பாடு தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக நடந்த கூட்டத்தில் பங்கேற்றதாக ஊடகங்கள் மூலம் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும், இது முற்றிலும் தவறான கருத்து என்றும், இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும், அதனை நிரூபிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் காணொளி நாடாக்கள் இருந்தாலும், அதனை வெளியிட பிரதமர் அஞ்சுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆலோசனைக் குழுக்களின் குறிப்புகளில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் பதிவுகள் இருப்பதாகவும்,முடிந்தால் அந்தக் குறிப்புகளை சபையில் சமர்ப்பிக்குமாறும்,அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்த செயல்முறையை நியாயப்படுத்த ஆலோசனைக் குழு பயன்படுத்தப்பட்டது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக பேசவில்லை என்றும்,வேட்புமனு தாக்கால் செய்த அரச ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்தே பேசினர் என்றும்,இறுதியில் தேர்தலை ஒத்திவைத்தல்,
வேட்பு மனுக்களை இரத்துச் செய்தல் என்றவாறு பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்றும்,ஏனைய உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் பிரேரணைகளை உறுதிப்படுத்துவது தொடர்பாக கூட்டுப் பொறுப்பு இல்லாததால்,இதுபோன்ற தவறான செய்திகளை சமூகமயப்படுத்த வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.
தாம் உட்பட எதிர்க்கட்சி தேர்தலை ஒத்திவைக்கவோ அல்லது வேட்புமனுக்களை இரத்து செய்யவோ ஒருபோதும் உடன்படவில்லை என்றும், தேர்தலை ஒத்திவைக்க அல்லது இரத்து செய்ய யோசனை முன்வைத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளிப்படுத்துமாறும், அவ்வாறான எந்தவொரு பிரேரணைக்கும் எதிர்க்கட்சி உடன்படவில்லை என்றும், அவ்வாறான யோசனையை எதிர்க்கட்சி முன்வைக்கவும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
தேர்தல்களுக்கு அஞ்சியதன் காரணமாகவே இதுபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன என்றும், இந்த பயத்தின் காரணமாக, ஆலோசனைக் குழுக்களில் நடக்கும் இத்தகைய செயல்களை அங்கீகரிக்க முடியாது என்றும், தேர்தலுக்கு அஞ்சாத கோழைகளாக இல்லாவிட்டால் தேர்தலை நடத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமரிடம் தெரிவித்தார்.