ஹமாஸ் தீவிரவாதிகளை வேரறுக்கவே காசா பகுதியில் தாக்குதல் நடத்தப்படுவதாகவும், காசா பகுதியில் போர் நிறுத்தம் ஏற்படாது எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹமாஸ் போராளிகளை முடக்கி அவர்களது பிடியில் சிக்கியுள்ள 230 இஸ்ரேலியர்களை மீட்பதே இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய நோக்கமாகும் எனவும், அதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவை நாடுவதாகவும் இஸ்ரேல் பிரதமர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
ஹமாஸ் போராளிகளால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய பணயக்கைதிகளில் 33 பேர் குழந்தைகள் என்றும் ஹமாஸ் வெளிப்படுத்தியுள்ளது.
பல நாடுகள் போர்நிறுத்தம் செய்யுமாறு தெரிவித்தபோதிலும், போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் போராளிகளிடம் இஸ்ரேல் சரணடைவதை அர்த்தப்படுத்துவதாகவும், இது முற்றிலும் சாத்தியமற்றது எனவும், ஹமாஸ் போராளிகளை அழித்து போரில் வெற்றிபெறும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் எனவும் இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.