மன்னார் கல்வி வலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு!

2023 கல்வியாண்டுக்கான மன்னார் கல்வி வலய மாணவர் பாராளுமன்றம் இன்று (06/11) மன்னார் கல்வி வலய மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெற்ற்றுள்ளது.

மாணவர் பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வாக சபாநாயகர் மற்றும் பிரதமர் ஆகியோர் வலயக் கல்விப் பணிப்பாளர் வலய மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் செல்வி ஜி.டீ.தேவராஜ் முன்னிலையில் சத்தியபிரமானம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற செயன்முறையைப் போலவே செங்கோல் ஏந்தப்பட்ட நிலையில் சபாநாயகர் பாராளுமன்ற அமர்வுக்கு அழைத்து வரப்பட்டு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றச் செயலமர்வு ஆரம்பித்தது. இதில் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சத்தியப்பிரமானம் செய்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பாராளுமன்ற அமர்வில் தங்கள் பகுதி மற்றும் பிரதேசங்களில் மாணவ சமூகத்துக்கு இடம்பெற்று வரும் குறைபாடுகளைச் சபையில் முன்வைத்தனர்.மாணவர்களிடையே அதிகரித்துக் காணப்படும் அலைபேசிப் பாவனை, மற்றும் பாடச்சாலைக்குச் செல்வதற்கான போக்கு வரத்து வசதிகள் மற்றும் குறைபாடுகள் சபையில் முன்வைக்கப்பட்டன.

இந்த பாராளுமன்ற அமர்வின்போது அழைக்கப்பட்டிருந்த விஷேட பிரதிநிதிகளான மன்னார் மாவட்ட ஓய்வு நிலை அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் , மன்னார் உதவி தேர்தல் ஆணையாளர் சிவராஜா , மன்னார் கல்வி வலயத்தின் கல்வி நிர்வாகத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.ஞானராஜ் , வலய பாராளுமன்ற இணைப்பாளர் எம்.பி.பிறின்ஸ் டயஸ் , கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட ஆசிரியர்களும், மாணவர்களும் இப்பாராளுமன்றச் செயலமர்வைக் கண்டு களித்தனர்.

மன்னார் மாவட்டத்தின் ஓய்வுநிலை அரசாங்க அதிபர் திருமதி, ஸ்ரான்லி டீமெல் உரையாற்றுகையில்,பாடசாலை மாணவர்களிடையே இவ்வாறான பாராளுமன்றச் செயற்பாடுகள் உருவாகும் போது அவர்கள் ஜனநாயகம் பற்றி அறிந்து கொள்ளவும் எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பில் மாணவர்கள் நன்றாகத் தெளிவு பெற்றுக்கொள்ள முடியும், என்றும் கூறினார்.

மேலும் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் செல்வி.ஜீ.டீ. தேவராஜா உரையாற்றுகையில், பிரதேச மற்றும் தேசிய அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு மாணவர்கடையே சகோதரத்துவம், சகவாழ்வு மற்றும் மக்களினங்கள் மற்றும் சமயக் குழுக்களுக்கிடையே புரிந்துணர்வு, மற்றும் முரன்பாடு தீர்த்தல், ஆகியவற்றை விருத்தி செய்து சமூக ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கும்,மாணவர்களைத் தேசத்தைக்கட்டியெழுப்பும் பணிக்காக நேரடியாகத் தொடர்பு படுத்திக் கொள்ளல், மாணவர்களின் தலமைத்துவத் திறன்களை விருத்தி செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்காகக் கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கமைய இவ்வாறு மாணவர் பாராளுமன்றங்கள் உருவாக்கப்படுவதாகக் கூறினார்.

இப்பாராளுமன்ற அமர்வில் மன்னார் கல்வி வலயத்திலுள்ள 55 பாடசாலை மாணவர்களில் 110 பேர் பங்கு பற்றியிருந்தனர்.

Social Share

Leave a Reply