நாட்டையும், கிரிக்கெட்டையும் கடவுள்தான் காப்பாற்றவேண்டும்-அர்ஜுன ரணதுங்க

களவெடுத்தவர்களை காப்பாற்றும் நாடாக இந்த நாடு காணப்படுவதாகவும், இந்த நாட்டையும் கிரிக்கெட்டையும் கடவுள்தான் காப்பற்றவேண்டுமென இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், விளையாட்டு துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகசபையின் தலைவருமான அர்ஜுனா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

விளையாட்டு துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக சபையின் நடவடிக்கைகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றம் 14 நாட்களுக்கு தடை விதித்துள்ள நிலையில் அது தொடர்பில் அர்ஜுன ரணதுங்கவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.

தனக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவிப்பு கிடைக்கவில்லை எனவும், ஊடகங்கள் மூலமாகவே தான் அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ள அர்ஜுன, ஊழல் செய்தவர்கள், கணக்காய்வாளர்கள் நாயகத்தினால் குற்றம் செய்தவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் எவ்வாறு ஆடை அணிந்துகொண்டு நீதிமன்றம் செல்கிறார்கள் என கேள்வி எழுப்பிய அதேவேளை இலங்கை பிரைஜையாக எந்த நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கும் தான் தலை வணங்குவதாக மேலும் கூறியுள்ளார்.

இந்த பதவிக்கு வருவதாக இல்லையா என்ற குழப்பம் எனக்கு இறுதி வரை இருந்தது. இருப்பினும் கிரிக்கெட் இந்த நாட்டுக்கு எடுத்து வளர்த்து கொடுக்க வேண்டுமென்ற ஆசை எனக்கும் இருந்தது. அதனாலேயே நான் இந்த பதவியை ஏற்றுக் கொண்டேன். வெளிநாட்டுக்கு சென்று பெரிய விடயம் ஒன்றை செய்யும் வாய்ப்பு சில வாரங்களுக்கு முன்னர் கிடைத்தது. சொந்தமாக அக்கடமி ஒன்றை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் செல்லவில்லை. நான் இந்த நாட்டுக்கு தேவையில்லை என்றால் நான் வேறு ஒரு நாட்டுக்கு சென்று எனக்கு தேவையானதை செய்து கொள்ள வேண்டுமென நான் நினைக்கிறேன். குறைந்தது அங்குள்ள இலங்கையருக்காவது ஏதாவது செய்ய முடியுமென தனது கவலையை வெளியிட்டுள்ளார். இந்த நாசகார வேலைகளை செய்பவர்கள் தொடர்ந்து நாசகார வேலைகளை செய்து முடிப்பார்கள். அப்போது நான் சொன்னது தொடர்பில் அனைவரும் உணருவார்கள் எனவும் மேலும் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இந்த கிரிக்கெட் ஊழல்வாதிகளுக்குள் சென்றால் அவர்களுக்கு தேவையானவை நடைபெறும். ஆனால் இளையவர்களுக்கும் நாட்டுக்கும் கிரிக்கெட் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். கிரிக்கெட் இப்போது வீழ்ச்சி கண்டதனை தாண்டி இன்னமும் மிகவும் பின்னடைவை சந்திக்கும். அப்போது தேர்தல் மூலம் அதற்கு மக்கள் பதில் வழங்குவார்கள். இந்தளவுக்கு பின் நிற்பவர் யார், இதனை மாற்ற முனைபவர் யார் என்பது எனக்கு தெரியும். அது தொடர்பில் தகவல்களை திரட்டி வருகிறேன். ஆதாரங்களின்றி நான் பேசமாட்டேன். தேர்தலுக்கு முன்னதாக அந்த நபரின் பெயரை வெளியிடுவேன். அவர் எந்த பின்னணியில் எதற்காக இந்த செயல்களை செய்கிறார் என தகவல்களை வெளியிடுவேன். மக்கள் தேர்தலில் அதற்கு உரிய பதிலை வழங்குவார்கள் என மேலும் கூறினார்.

அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டு அதன் மூலம் கண்காணிப்பது எனும் நிலை சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் அரசியல் தலையீடு என்னும் நிலைக்கு இலங்கை கிரிக்கெட்டை எடுத்துச் செல்லும் நிலை காணப்படுகிறது. அதற்காக தடை ஏற்படும் நிலை ஏற்படலாம். இந்த முடிவை எடுத்தவர்கள் அதற்காக பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார். கிரிக்கெட் தெரியாத ஒருவர். துடுப்பையோ பந்தையோ தொடாத ஒருவர். அவரே இந்த விடயங்களை செய்தவர். அவர் தொடர்பில் உரிய நேரத்தில் நான் கூறுவேன் எனவும் அர்ஜுன தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் தொடர்பில் கதைப்பதற்கு மனவருத்தப்படுகிறேன். ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு கிரிக்கெட்டை வளர்க்க முயல்கிறேன். எனக்கு தலை சுகமில்லையா என்று எனக்குள் கேள்வியும் எழுகிறது. இந்தளவு ஊழல் செய்த்தவர்களை இந்த நாடு காக்கிறது என்றால் இந்த நாடு என்ன? என கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசியலுக்கு மீண்டும் வருவேன். சரியான வேலைத்திட்டங்களை செய்பவர்களோடு நான் இணைந்து செயற்படுவேன். அரசியல் எனக்கு வேண்டாம் என்ற நிலை காணப்பட்டது. இந்த கட்சி அரசியல் இந்த நாட்டை வீணாக்கியுள்ளது. இவ்வளவு காலமும் நான் இதனை கூறவில்லை. பாரளுமன்றத்தில் நல்ல பாரளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நல்ல அணி எதிர்காலத்தில் உருவாகும். அவ்வாறானவர்களோடு நான் இணைவேன். இந்த நாட்டை மாற்ற வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாட்டை எடுத்துச் செல்ல முடியாது. அரசியல் எவ்வாறு செயற்படுகிறது. அரசியலுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என இன்று நான் அறிந்து கொண்டேன்.

நாட்டை விரும்பும், களவு செய்தவர்களை காக்காத, நாட்டின் வளங்களை நாசம் செய்யாத, இந்த நாட்டையும், எதிர்கால பிள்ளைகளையும் உணர்ந்து நாட்டுக்கு நல்லது செய்யவுள்ள அணியோடு நான் இணைவேன். அவ்வாறான கூட்டணி ஒன்று உருவாகும். அதில் நான் இருப்பேன் என அர்ஜுன ரணதுங்க மேலும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version