மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொன்னையன் குடியிருப்பு பகுதியில் மக்களின் தனியார் காணிகளில் நடை முறைப்படுத்தும் கனியவள மணல் அகழ்வுக்கான ஆவணத்தைச் சட்டபூர்வமாகக் கையளிக்கும் நடவடிக்கைக்காக இன்று (08/11) புதன்கிழமை காலை மன்னார், மற்றும் தென் பகுதிகளில் உள்ள சுமார் 20 வரையிலான திணைக்கள அதிகாரிகள் வெவ்வேறு ரக வாகனங்களில் குறித்த பகுதிக்கு வருகை தந்த நிலையிலேயே கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களால் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த விடையத்திற்காக அதிகாரிகள் வருகை தருவதை அறிந்த அக்கிராம மக்கள் தங்கள் ஆலய மணிகளை ஒலிக்க வைத்து கிராம மக்களை ஒன்று திரட்டி வருகை தந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாது பாதைக்கு குறுக்கே மரங்களை போட்டுத் தடை செய்தனர்.
அத்துடன் இச் சம்பவத்தை அறிந்து மன்னார் பிரஜைகள் குழுவினர், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள், மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் சம்பவ இடத்துக்குச் சென்று இப்பகுதிக்கு அதிகாரிகள் பெருமளவில் வந்ததன் நோக்கத்தை கேட்டறிந்தனர்.
அப்பகுதியில் கனியவள மணல் அகழ்வதற்கான இடங்களை பார்வையிட்டு அதற்கான அனுமதியை வழங்கும் நோக்குடனே இக்குழுவினர் வருகை தந்ததை அறிந்ததும், மக்கள் ஒன்று திரண்டு இதற்கான எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த மணல் அகழ்வு மற்றும் காற்றாலைகளால் இப்பிரதேசம் எதிர் கொண்டு வரும் பாதிப்புகளை
வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு மக்கள் தெளிவுப்படுத்தி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
மன்னார் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகளின் தலைமையிலேயே குறித்த குழுவினர் வருகை தந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் குறித்த அதிகாரிகள், மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிய பிரதிநிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தில் ஊடகவியளாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

