நாட்டிலுள்ள நாற்பது இலட்சம் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு பாடசாலையிலும் ஆங்கில மொழியை மையமாகக் கொண்ட கல்வியை ஆரம்பிக்க தான் செயற்பட்டு வருவதாகவும், நாட்டிலுள்ள 10,126 பாடசாலைகளில் ஆங்கில மொழி ஆய்வகங்களை நிறுவுவதன் மூலம் ஆங்கில மொழியை ஊக்குவிக்கும் முடியும் என நம்புவதாகவும்,நாட்டில் உள்ள 10,126 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு நவீன ஆற்றல்மிக்க கல்வி நிலையங்களாக புனரமைக்கப்படும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சர்வதேச தொழில் சந்தையின் தேவைக்கு ஏற்ற தொழில் பரப்பை நாட்டில் உள்ள பாடசாலை பாடத்திட்டம் கொண்டிருக்க வேண்டும் எனவும், நாட்டின் பிள்ளைகள் ஸ்மார்ட் பிரஜைகளாக மாற வேண்டுமென்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள பாடசாலைகளுடன் இணைந்து இலங்கை பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நாடு வங்குரோத்தாக காரணமானவர்கள் நாட்டு மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,இதன் மூலம் நாட்டிலிருந்து களவாடப்பட்ட வளங்களைப் பெற்றுக்கொள்ளும் முறைமையை நாட்டில் நடைமுறைப்படுத்த முடியும் என்றும்,இழந்த வளங்களை மீளப் பெற்று நாட்டின் கல்வியை மேம்படுத்துவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கையில் கிரிக்கெட் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்,கிரிக்கெட் மூலம் நாட்டுக்கு ஏராளமான பணம் கிடைப்பதாகவும், இலங்கையில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யக் கிடைத்த பணத்தை பயன்படுத்தி பல்வேறு மாபியாக்கள் உருவாகியுள்ளதாகவும், இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் முதலில் பேசியது எதிர்க்கட்சியே என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கூறி, இலங்கையில் கிரிக்கெட்டை தடை செய்யுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும்,ஆனால் இதன் விளைவுகள் சாதகமான விளைவுகளாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் வங்குரோத்து நிலையால் பல்வேறு சவால்களையும்,
பாதிப்புகளையும் ஒட்டுமொத்த சமூகமும் சந்தித்து வரும் இவ்வேளையில்,வரலாற்றில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத பாரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் 48 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியில் மொறட்டுவை மெதடிஸ்ட் கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (17) கலந்து கொண்டு உரையாற்றும் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 171,966,900.00 ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.பிரபஞ்சம் பஸ் திட்டத்தின் கீழ் 80 அரச பாடசாலைகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு 389,200,000.00 ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது.
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டத்தின் கீழ் 48 அரச பாடசாலைகளுக்கு 447 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகாரம் இன்றியும் நாட்டில் எதிர்க்கட்சியானது கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்காக 6000 இலட்சம் ரூபா நன்கொடை அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.