இது வெறும் தேர்தல் நோக்கம் கொண்ட செலவுத் திட்டம் – உதயகுமார் எம்.பி உரை!

கௌரவ சபாநாயகர் அவர்களே,

வரவு செலவு என்பதன் வரைவிலக்கணம் “முதல் நிலையிலான ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது வருமானம் மற்றும் செலவு திட்டத்தை உள்ளடக்கிய ஆவணமாகும்” என பொருளியல் அறிஞர் ரேனி ஸ்டோன் கூறுகிறார்.

“வருவாய் வரவு செலவுதிட்டம்”

“மூலதன வரவு செலவு திட்டம்,”

“நிதிக்கு வாக்கெடுப்பு வரவு செலவுத் திட்டம்,”

“பூஜ்ய வரவு செலவுத் திட்டம்,”

“செயல்திறன் வரவு செலவுத்திட்டம்,”

“சமநிலை வரவு செலவுத் திட்டம்,”

“சமநிலையில்லா வரவு செலவுத் திட்டம்,”

“உபரி வரவு செலவுத் திட்டம்,”

“பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்” என வரவு செலவுத் திட்டங்கள் பல்வேறு வகைப்படும்.

இலங்கையில் 2024ம் நிதியாண்டுக்காக ஜனாதிபதி அவர்கள் தாக்கல் செய்துள்ள வரவு செலவுத் திட்டம் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டமாகும்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசு எதிர்பார்க்கும் வருமானம் திட்டமிடப்பட்டுள்ள செலவுகளை விட குறைவாக இருந்தால் – அது “பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம்“ எனப்படும். கடந்த 75 வருடங்களாக இலங்கை பற்றாக்குறை வரவு செலவுத் திட்டத்தையே முன்வைத்து வருகிறது.

அந்த வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய 2024 ஆம் நிதி ஆண்டில் அரச வருமானம் 4,172 பில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆம் நிதி ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 6,978 பில்லியன் ரூபாவாகும்.

அதன்படி, வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 2,851 மில்லியன் ரூபாவாகும்.

எதிர்வரும் நிதி ஆண்டில் நாடு பெற்றுள்ள கடன்களையும் வட்டிகளையும் செலுத்துவதற்காக அரசாங்கத்திற்கு 6,919 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

செலுத்த வேண்டிய கடன், செலவுகள் என்பவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது அடுத்த நிதி ஆண்டுக்கான கடன் தேவை 9,770 பில்லியன் ரூபாவாகும்.

வருமானத்திற்கு ஏற்ப செலவுகள் செய்யப்பட வேண்டும் என பௌத்த தர்மம் போதிப்பதாக ஜனாதிபதி அவர்கள் தனது உரையில் கூறிவிட்டு – அந்த தர்மத்திற்கு எதிரான வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்துள்ளார்.

கடன்களை முதலீட்டிற்காக பெற வேண்டும் எனவும் – செலவுக்காக கடன் பெறுவது ஆபத்து என்றும் – புத்தரின் சாமஞ்ஞபல சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் சமர்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை ஈடுசெய்வதற்கு கடனுக்கு மேல் கடன் பெற வேண்டும் என்பதோடு பணம் அச்சிடுதல், அதிக வரி அறவிடுதல் என்பவற்றை தவிர்க்க முடியாது.

ஆகவே, பௌத்த சிந்தனையின் பெயரால் நாட்டு மக்களுக்கு ஏமாற்றம் தரக்கூடிய வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்பித்துள்ளார்.

இது நடைமுறைசாத்தியமான வரவு செலவுத் திட்டம் இல்லை. தூர நோக்கம் கொண்ட வரவு செலவுத் திட்டம் இல்லை. குறுகிய நோக்கம் கொண்ட வரவு செலவுத் திட்டம். அந்த குறுகிய நோக்கம் என்ன? அதுதான் அடுத்த வருடம் நடைபெறும் தேர்தல்களை வெற்றிகொள்வதாகும். ! எனவே சுருக்கமாக கூறினால் இது “தேர்தல் மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட” வரவு செலவுத் திட்டம்.

இப்படி இருக்கையில் அரச ஊழியர்களுக்கான 10000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவு அதிகரிப்பு வெறும் ஏமாற்றுத் திட்டமாகும். இந்த கொடுப்பனவு உயர்வைப் பெற அரச ஊழியர்கள் தவமாய் – தவமிருக்க வேண்டிய நிலை உள்ளது.

காரணம் உயர்த்தப்படும் இந்த வாழ்வாதார கொடுப்பனவு ஜனவரி, பெப்ரவரி, மார்ச் இந்த மூன்று மாதங்களுக்கு கிடைக்காது. அந்த மூன்று மாத கொடுப்பனவு ஒக்டோபர்
மாதத்தில் இருந்து கட்டம் கட்டமாக வழங்கப்படும். இப்படி ஒரு கொடுப்பனவு உயர்வு தேவையா ? என அரச ஊழியர்கள் வெறுக்கும் அளவிற்கு இத்திட்டம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வெட் வரியை அதிகரித்து விட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்துவிட்டு,
எரிபொருள்,சமைபல் எரிவாயு விலையை அதிகரித்துவிட்டு, தொடர்ச்சியாக மின்கட்டணத்தை அதிகரித்துவிட்டு, வாழ்க்கைச் செலவு சுமையை ஏற்றிவிட்டு வெறும் 2000, 3000 என கொடுப்பனவு அதிகரிப்பு செய்வது கண்துடைப்பாகும்.

அரச ஊழியர்களுக்கு மாத்திரம் மேலதிக கொடுப்பனவு வழங்கிவிட்டு ஏனையவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதாவது 1.3 மில்லியன் அரச ஊழியர்களை கொண்ட குடும்ப 5 மில்லியன் மக்களுக்கு இந்த குறுகிய தொகை சென்றடையும் நிலையில் மிகுதியுள்ள சுமார் 3 மடங்கு அதிகமுள்ள
15 மில்லியன் மக்களின் நிலை என்ன ?
அவர்கள் வாழ்க்கை செலவுக்கு எவ்வாறு ஈடுகொடுப்பது ?

“”இது சமூகத்தில் சமநிலை அற்ற தன்மையை உருவாக்கும். “

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை,
அதேபோல, பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை வாய் திறக்கவில்லை. இது நாட்டுக்காக கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அநிதீயாகும்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக – “வரி செலுத்தி இரவு பகலாக உழைக்கும்” சாதாரண மக்கள் – அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும் என எதிர்பார்த்தனர்.

ஆனால், ‘ஒரு பருக்கை அரிசிக்கு கூட விலை குறைப்பு செய்யாமல்” இந்த அரசாங்கம் அவர்களை ஏமாற்றியுள்ளது.

வெட் வரி 15% – 18% ஆக அதிகரிப்பு என்பது தற்போது உள்ள வரியை விட 20 வீத அதிகரிப்பாகும்
அதேபோல இதுவரை காலம் வெட் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த 100க்கு மேற்ப்பட்ட பொருட்களுக்கும் புதிதாக 18% வெட் வரி விதிக்கப்படும்.

விளையாட்டுத்துறையை பொருத்தளவில் கிரிக்கெட் மாத்திரமே விளையாட்டு – என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுவும், கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து ஜனாதிபதி அவர்கள் வாய் திறக்கவில்லை.
நாட்டின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பெற்றுள்ள கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது – உள்நாட்டில் அதற்கான வருமான அதிகரிப்பு வழிகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, ஏற்றுமதி அதிகரிப்பு போன்றவை தொடர்பில் எவ்வித தெளிவான திட்டமும் வரவு செலவுத் திட்டத்தில் இல்லை.

ஆகையால், இதனை வரவு செலவு திட்டம் என்று அழைப்பதற்கு பதிலாக வெறுமனே “செலவுத் திட்டம்” என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

நாட்டில் இன்று சந்தை வீழ்ச்சி அதிகரித்துள்ளது. பொது மக்களின் நுகர்வுத் திறன் குறைந்துள்ளது. சந்தையில் பொருட்கள் கிடைத்தாலும் அவற்றை கொள்வனவு செய்ய மக்களிடம் பணம் இல்லை.

நுகர்வு வீதம் குறைவாக உள்ளதால் – விற்பனை குறைந்துள்ளது. விற்பனை குறைந்தால் – வரிகளை அதிகரித்தும் பயனில்லை. எதிர்பார்க்கும் வரி வருமானத்தை பெற முடியாது.

அதனால், அரசாங்கம் மீண்டும் கடன்படும் நிலை ஏற்படும். வெளிநாட்டு கடன் பெறும் எல்லையை அதிகரிக்க நேரிடும். அதன்பின், ரூபாவின் பெறுமதி குறைந்து – டொலர் பெறுமதி உயரும். மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கும்.

எனவே, வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதால் பயனில்லை. !

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட 77 வாக்குறுதிகளில் 69
நிறைவேற்றப்படாமல்
அதாவது 90% நிறைவேற்றப்படாமல்
அவை மீண்டும் தற்போதைய வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

இம்முறையும் அது நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியே. ?

நடைமுறைக்கு சாத்தியமில்லாத வரவு செலவு திட்டம் ! நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளிவீசியுள்ள …..வரவு செலவு திட்டம்

பொருளாதாரத்தை மீட்டேடுக்க ?
வருமானத்தை அதிகரிக்க. ?
கடனை மீள செலுத்த ?
மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்க …
எந்த திட்டமும் இல்லாத வரவு செலவு திட்டம்

எம்மை பொருத்தவரை – டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் சீசனில் வர வேண்டிய நத்தார் தாத்தா Santa clause – நவம்பர் மாதத்தில் வரவு செலவு திட்ட சீசனில் வந்ததாகவே தோன்றுகிறது.

பைக்குள் சில இனிப்புகளை கொண்டுவந்து, அப்படியே ஆங்காங்கே எடுத்து வீச – ஒருசிலர் மாத்திரம் அதனை பாய்ந்து பிடித்து நன்மை அடைவதுடன், பலர் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

எனவே, இது முற்று முழுதாக நாட்டு மக்களை ஏமாற்றும் வரவு செலவுத் திட்டம் என்பதை நினைவுபடுத்தி இதனால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் இல்லை

கடந்த காலங்களில்
தேவையற்ற கடன்கள்…..
தேவைகதிகமான செலவுகள்…..
தேவையற்ற – பயன்ற்ற அபிவிருத்தி திட்டங்கள்,
ஊழல்கள் என்பனவே பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்

ஆகவே, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் – முக்கிய சூத்திரதாரி ராஜபக்‌ஷ குடும்பம் என்று உயர் நீதிமன்றம தீர்ப்பு அளித்துள்ளது.
ஆகவே, ராஜபக்‌ஷ குடும்பம் நாட்டை ஆட்சி செய்தவர்கள் உட்பட 45 வருட அனுபவமிக்க அரசியல் ஜாம்பாவன் தற்போதய ஜனாதிபதி என அனைவரும் பொறுப்பு கூற வேண்டும்.

உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள தீரப்பின் மூலம் ஊழலில் ஈடுப்படுபவர்கள், தவறு செய்பவர்கள், கடமை தவறுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாகும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version