ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைத்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தாலும், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு அவ்வாறான அதிகாரங்கள் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01.12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் இன்று (01.12) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
எல்லை நிர்ணய குழுக்களை நியமித்தல்,நிதியில்லை எனக் கூறுவது,தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று நீதிமன்றத்திற்கு செல்வது,தேர்தல் திணைக்கள அதிகாரிகளை ஜனாதிபதி அழைப்பது,தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மூலம் கட்டுப்பணங்கள் ஏற்றுக்கொள்வதை நிறுத்துவது,அமைச்சரவை தீர்மானங்களை எடுப்பது, தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வரைவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது,தேர்தலை நடத்தினால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது போகும் எனக் கூறுவது, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை பதவி விலகக் கோருவது மற்றும் இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தல் போன்ற பல்வேறு உபாயங்களை கையாண்டு தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிட்ட அரச ஊழியர்கள் சம்பளம் தொடர்பில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும்,இன்றளவிலும் அவர்களுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றும், அவர்கள் கடமையாற்றும் நிறுவனங்களுக்குச் செல்லக் கூட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வெளிப்படுத்தினார்.
தரம் குறைந்த உரங்களை இறக்குமதி செய்யவும், நட்புவட்டார நண்பர்களுக்கு கோடிக்கணக்கான வரிச்சலுகைகளை வழங்கவும் அரசாங்கத்திடம் பணம் இருந்தால்,தேர்தலை நடத்த ஏன் பணம் இல்லை என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்,உள்ளூராட்சி மன்றங்கள் நிறுவப்படாத நிலையில், அரசாங்க தரப்பில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை தயாரித்துள்ளனர் என்றும்,இதுபோன்ற சூழ்ச்சிகரமான உபாயங்களை கையாளுவதை தவிர்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
வலையொளி இணைப்பு-