மன்னார், சிலாவத்துறை, கொண்டஞ்சிக்குடா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடிக்க முயன்ற 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம், சிலாவத்துறை, மன்னார் மற்றும் வாங்கலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 48 வயதுடையவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு கடற்படைக் கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் சிலாவத்துறை கொண்டச்சிக்குடா கடற்பகுதியில், விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்டதாக கூறப்படும் 1670 கடலட்டைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், சட்டவிரோதமாக சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் 12 பேர் இதன்போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுழியோடி உபகரணங்கள் மற்றும் குறித்த படகுகள் என்பனவற்றையும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 12 பேரும், அவர்கள் பயணித்த நான்கு டிங்கி படகுகளும், 1670 கடல் அட்டைகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.