வவுனியாவில் ஆண் ஆசிரியரினால் பனை மட்டையினால் தாக்கப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி

கடந்த வாரம் வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் ஆண் ஆசிரியரினால் பனைமட்டையினால் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. நடைபெற்ற சம்பவம் தொடர்பிலான முழுமையான செய்திக்கு கீழுள்ள லிங்கை கிளிக் செய்து பார்வையிடலாம்.

இந்த நிலையில் நேற்று(07.12) பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் அவர் காப்பாற்றப்பட்டு வவுனியா போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வழங்குவதாகவும், அவருக்கு பாடசாலையிலிருந்து இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும், அதனை மாற்றுவதற்காக கடிதம் வழங்குமாறு கோரி தனது வீட்டுக்கு வருகை தந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார். அத்தோடு வீதியால் வீட்டுக்கு வரும் போது யாரென்றே தெரியாத, தமது ஊருக்கு புதியவர்களாக தெரிகின்ற சில இளைஞர்கள் தனக்கு தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டதவாகவும், தான் அந்த அதிருப்தியில் வீடு சென்ற வேளையில், அங்கு தன்னை தாக்கிய ஆசிரியர் காணப்பட்டதாகவும், அதன் காரணமாக தான் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் மாணவி மேலும் கூறியுள்ளார். அத்தோடு அந்த இளைஞர்களின் இவ்வாறன நடத்தைக்கும் வார்த்தை பிரயோகங்களுக்கும் ஆசிரியர் காரணம் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் பாடசலைக்கு வருகை தந்த தினத்தில் தனது வகுப்பறைக்கு அருகில் வந்து “சம்பவம் இருக்கு என்று சொல்லுங்கள்” என அச்சுறுத்தும் வகையில் கூறியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைய செய்யப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு நேற்று(07.12) முதல் இடமாற்றம் செய்யப்பட்டதாக குறித்த சம்பவம் இடம்பெற்ற பாடசாலை அதிபர் வி மீடியாவுக்கு உறுதி செய்துள்ளார்.

குறித்த ஆசிரியர் தமது வீட்டுக்கு வருகை தந்தனை பாதிக்கப்பட்ட மாணவியின் பாட்டி உறுதி செய்துள்ளார். அத்தோடு இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவலைப் பெற்றுக் கொள்ள வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் பதிலளிக்கவில்லை.

நடைபெற்ற சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் பொலிஸார் வாய்மூல வாக்குமூலம் பெற்றுள்ள போதும், எழுத்து மூல வாக்குமூலம் பெறவில்லை எனவும் தெரிய வருகிறது.

இந்த விடயத்துடன் சம்மந்தப்பட்ட பாடசலை அதிபர் மற்றும் வடக்கு வலய கல்வி பணிப்பாளர் ஆகியோர் நேரடியாக வைத்தியசாலைக்கு விஜயம் செய்து மாணவியின் வாக்கு மூலத்தை பெற்று உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது சிறந்தது. மாணவியின் எதிகாலத்துக்கும் அது நல்லதாக அமையும்.

Social Share

Leave a Reply