கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா களவிஜயம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்புக்களை ஆராயும் நோக்குடன் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நேற்று (20.12) களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது பெய்துவரும் தொடர் மழை காரணமாக இரணைமடு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்டஅமைச்சர், மக்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். மேலும் குறித்த மக்களுக்களது உணவு, சுகாதாரம், ஏனைய அடிப்படை வசதிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தார். அவர்களுக்கு உடனடியாக செய்து கொடுக்கப்பட வேண்டிய அத்தியாவசிய தேவைகள் குறித்து அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மேலும், தொடர் மழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து வருகின்ற நிலையில், அனர்த்த நிலைமைகளை ஆராயும் நோக்கோடு இரணைமடுவிற்கு களவிஜயமொன்றை அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

இரணைமடு குளத்தினால் ஏற்படும் வெள்ள அனர்த்தங்கள் எதிர்வரும் காலங்களில் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அமைச்சர் விவசாயிகளுடன் நேரடியாக சென்று பார்வையிட்டார் .

கிளிநொச்சி மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இரணைமடு குளத்தினால் ஏற்படும் வெள்ள அனர்த்தங்கள் எதிர்வரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
தற்சமயம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

பூநகரி பிரதேச மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் குறித்த பிரதேசத்திற்கு அமைச்சர் களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது மக்களோடு கலந்துரையாடி அவர்களின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

Social Share

Leave a Reply