அதிக வரிச்சுமை காரணமாக, நாட்டில் குடும்பங்களின் வருமானம் 60 வீதத்தால் குறைவடைந்துள்ளதுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 57 ஆவது கட்டமாக ஹபரண மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் குடும்பங்களின் வருமானம் 60 வீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில்,செலவின் அளவு 90 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக 22 வீதமானோர் கடனில் சிக்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாலர் பாடசாலை மட்டத்திலிருந்து பல்கலைக்கழக மட்டம் வரை கல்வியில் ஈடுபடும் 55 வீதமானவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள போதிலும்,பொருளாதார நெருக்கடியின் போதும் 3.4மூ வீதமானோரின் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் வரிச்சுமையை அதிகரிப்பதன் காரணமாகவே நாடு இவ்வாறானதொரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறிய எதிர்கட்சித் தலைவர் கள்வர்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை அங்கீகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.