போதைப்பொருள், பணம், தங்க நகைகள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகளுடன் பொலன்னறுவையின் புறநகர்ப் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் சிறிது காலம் தங்கியிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை அகலவத்தை பகுதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் சில காலமாக இந்தப் பகுதியில் தங்கி ஈசி கேஷ் முறையில் போதைப்பொருள் விநியோகம் செய்து வந்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
33 வயதான குறித்த பெண் ஆறு மாத கர்ப்பிணி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் 38 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஐந்து மாதங்களாக இந்த விடுதியில் தங்கி இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தம்பதியினரிடமிருந்து, 19,31,000 பணம், தங்க நகைகள், ஒரு முச்சக்கர வண்டி, நான்கு கையடக்கத் தொலைபேசிகள், போதைப்பொருள் மற்றும் நான்கு சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் 2007ஆம் ஆண்டு மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற குற்றச் செயலில் ஈடுபட்டு, பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.