நாட்டில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கு முன்னோடியாகப் பணியாற்றியவரே டி.பி. ஜயதிலக்க – ஜனாதிபதி தெரிவிப்பு

அனைத்து குடிமக்களையும் உள்ளடக்கி சமூக, கலாசார, சமய மற்றும் கல்வி ரீதியாக நாட்டில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கு முன்னோடியாகப் பணியாற்றியவரே டி.பி. ஜயதிலக்க என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் 125 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

டி.பி. ஜயதிலக்க முன்னெடுத்தது போன்ற வேலைத்திட்டமொன்று நாட்டுக்கு அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நிகழ்காலத்தை விட எதிர்காலத்தில் கவனம் செலுத்தி ஒரே இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என கூறியுள்ளார்.

கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் 1898 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அனகாரிக தர்மபாலவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பகாலத் தலைவராக டி.பி. ஜயதிலக தெரிவு செய்யப்பட்டதோடு நாட்டின் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய பௌத்த அமைப்பாக கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் நாட்டிற்கான பரந்த நோக்கத்தை நிறைவேற்றி வருகின்றது.

மேலும் ‘ஒரே இலங்கைக்கான கருத்தாடல்’என்ற தொனிப்பொருளில் இவ்வருட ஆண்டு நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு மலர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், பத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version