வனிந்து அபாரம். தொடரை வென்றது இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையில் இன்று (11.01) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை 2-0 என வெற்றிபெற்றுள்ளது.

மழை காரணமாக போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மழை காரணமாக 27 ஓவர்ககளாக குறைக்கப்பட்டது. வனிந்து ஹசரங்க சிறப்பாக பந்துவீசி 7 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார். இது அவரின் சிறந்த பந்துவீச்சு பெறுதி ஆகும். இலங்கை அணிக்காக ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பெறப்பட்ட 2 ஆவது சிறந்த பந்துவீச்சு பெறுதி ஆகும். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சமிந்த வாஸ் கூடுதலான 8 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். முரளிதரன் 7 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய சிம்பாவே அணி 22.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜொய்லோர்ட் கும்பி 29(34) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 7 விக்கெட்களையும், ஜனித் லியனகே, டில்ஷான் மதுஷங்க, மஹீஸ் தீக்ஷண ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 16.4 அணி ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை பெற்றது. இதில் குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 66(51) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ரிச்சர்ட் ங்கரவா, வெல்லிங்டன் மசகட்சா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

முதற் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி போராடி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது.

Social Share

Leave a Reply