கைதிகளுக்கிடையில் மோதல் ஏற்பட்ட கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் நிர்வாகம் எதிர்காலத்தில் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மோதல்கள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் தொடர்பில் எதிர்காலத்தில் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், இரண்டாவது தடவையாக அந்த நிலையத்திற்கு வரும் கைதிகளை வேறு இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தடவையாக வரும் கைதிகளாலேயே பல மோதல்கள் ஏற்படுவதாக விசாரணைகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளதையடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று (12.01) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 25 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
மோதலின் போது ஐம்பது கைதிகள் தப்பிதுள்ளதுடன், அவர்களில் இருபத்தைந்து பேர் பின்னர் பொலிசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.