வடமாகாணத்தின் A 9 வீதியில் வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு தடை செய்யப்படுவதாக வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள வீதி விபத்துக்குள்ளே இந்த முடிவுக்கு கரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகல்,இரவு வேளைகளில் இருபக்கமாக வாகனங்களை நிறுத்த முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 18 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துக்களில் 134 பேர் இறந்துள்ள அதேவேளை, 23 பேர் மோசமான காயங்களுக்கு உள்ளான அதேவேளை, 308 பேர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
வன்னி, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட பொலிஸ் பிரிவுகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையோடு இணைந்து பொருத்தமான வாகன தரிப்பிடங்களை தெரிவு செய்து அவை பற்றி வாகன ஓட்டுனர்களுக்கு தெளிவூட்டுமாறு வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உரிய பொலிஸ் பிரிவுகளுக்கு அறிவித்துள்ளார். அத்தோடு வாகனங்களை தரிப்பது தொடர்பில் உரிய அறிவித்தல்களை காட்சிபடுத்துமாறும், ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை ஓட்டும் போது, ஆசனபட்டி அணிவது, வேக கட்டுப்பாடு, உரிய வீதி ஒழுங்களை பின்பற்றுதல், வீதி சமிக்கைகளை பின்பற்றுதல் மற்றும் அவதானமாக வாகனங்களை ஓட்டுதல் போன்றவற்றை சாரதிகள் சரியாக கடைபிடிக்குமாறு வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார கேட்டுக்கொண்டுள்ளார்.