நாட்டை கட்டியெழுப்பும் கனவை நனவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை விட சிறந்த திட்டங்கள் காணப்படுமாயின், அதனை ஆராய்வதற்கு தான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார சவால்களிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மீண்டெழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வீழ்ச்சியடைந்த பொருளாதார நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு கிரேக்கத்திற்கு 10 வருடங்களை விட அதிகக் காலம் தேவைப்பட்ட போதிலும், இலங்கை மிகக் குறுகிய காலத்தில் சிறப்பான சாதனைகளை படைத்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
சர்வதேச தரத்தின் அடிப்படையில் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
நவீன மற்றும் வலுவான பொருளாதாரத்தை நோக்கி மாறும் வகையில், பொருளாதார மாற்றுச் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.