நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பாக சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு முரணான பல சரத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த சட்டத்தை நிறைவேற்றியதில் சபாநாயகர் அரசியலமைப்பை கூட மீறியிருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08.02) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
2024 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தில்,உயர் நீதிமன்றம் வழங்கிய சில பரிந்துரைகளுக்கு முரணான சில பரிந்துரைகள் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு மேற்கொள்ள முடியாது.நாம் வாக்கெடுப்பை கோரினோம்.அச்சந்தர்ப்பத்தில் Head Phone ஐ போட்டுக் கொண்டு உங்களுக்கு தேவையானதை செய்து கொண்டிருந்தீர்கள்.
அவ்வாறு செயற்பட முடியாதல்லவா?,
இறுதியில் வாக்களிக்கும் உரிமையையும் நீங்கள் வழங்கவில்லையல்லவா என சபாநாயகரிடம் தெரிவித்தார்.
பல சந்தர்ப்பங்களில் நீங்கள்(சபாநாயகர்) வாக்களிப்பை வழங்கவில்லை.
உயர்நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு முரணாகவே பாராளுமன்றம் செயற்பட்டுள்ளது.இதனை நான் பொறுப்புடன் இச்சபையில் கூறிக்கொள்கிறேன்.நாட்டின் மீயுயர் அரசியலமைப்பு பாரியளவில் மீறப்பட்டுள்ளது. பரிந்துரைகள் உட்சேர்க்கப்படாமைக்கு நீங்கள்(சபாநாயகர்) பொறுப்புக்கூற வேண்டும்.
எனவே இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது,இது அரசியலமைப்பை மீறும் செயல்.
இதற்கு சபாநாயகரும் உடந்தையாக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சட்டத்தின் பிரிவு 24 மற்றும் சட்டமூலத்தின் 27 ஆவது பிரிவு 11(ஏ) உடன் ஆராயும் போது, தடை செய்யப்பட்ட அறிக்கையால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, தடை செய்யப்பட்ட அறிக்கையை வெளியிட்ட நபர்களுக்கு அல்லது அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு உத்தரவுகளை வழங்கவும் ஏதேனும் தடை செய்யப்பட்ட அறிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையிடலுக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு பணிப்புரை வழங்கவும், பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும்,பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை இல்லாமலாக்குவது அல்லது அத்தகைய நிகழ்நிலை அமைவிடத்தில் இருந்து தடை செய்யப்பட்ட கூற்றை அகற்றுவதற்கு, எவரேனும் இணைய சேவை வழங்குநர்களுக்கு அல்லது இணைய இடையீட்டாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கசார்பின்மையின் பேணுகைக்கு பாதகமாகவுள்ள எவையேனும் தொடர்பாடல்களை உகந்த நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள விடயத்தில்,உண்மைகளை ஆராய்ந்து நீதிமன்ற உத்தரவு அவசியமானது என அவதானித்த போதிலும்,
நிபந்தனைகளோடு உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் இதில் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
சட்டப்பிரிவு 13 இன் பிரகாரம்,திருத்தம் செய்யப்பட்டுள்ளதற்கு மேலதிகமாக,நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான பிரிவு 13 இல் மேலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் 46 மற்றும் 47 பக்கங்களில் பரிந்துரைத்திருந்தாலும்,இந்த மேலதிக திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை.இது தவிர, பிரிவு 16 ஆம் பிரிவில்,இலங்கைக்குள் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பாக பொய்யான கூற்றுக்களை பகிர்தல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான பொய்யான அறிவிப்புகளை செய்தல், கலகத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான கூற்றுகள் மூலம் அநாவசியமான முறையில் ஆத்திரமூட்டுதல், பொய்யான கூற்றொன்றின் மூலம் மதக்கூட்டம் ஒன்றைக் குழப்புதல், மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற திடமான உள்நோக்கத்துடன் போலியான கூற்றுகளை பகிர்தல், மோசடி செய்தல், ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பொய் கூற்றுகளின் மூலம் வேண்டுமென்றே நிந்தை செய்தல்,துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கான சம்பவங்கள் தொடர்பான கூற்றுகளை தொடர்பாடல் செய்தல், சிறுவர் துஷ்பிரயோகம், தவறொன்றைச் செய்வதற்காக தன்னியக்கச் செய்நிரல்களை உருவாக்குதல் அல்லது மாற்றுதல், ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரையுடன் இணங்கி செயற்படத் தவறுதல் என்பன இந்த சட்டத்தின் கீழ் குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் மத உணர்வுகளை புண்படுத்தல் விடயத்தில் இணைய பயனர்கள் அச்சமின்றி இணையத்தில் உலாவுவதற்குத் தேவையான பாதுகாப்பு சூழல் சீர்குலைவதால்,
உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகளை சரியாக கடைபிடிக்க வேண்டுமாக இருந்தால்,16 ஆவது பிரிவு நீக்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும் அவ்வாறானதொன்று இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சட்டத்தின் பிரிவு 19 இன் பிரகாரம்,மேலே 16 பிரிவில் உள்ளதை போலவே இதிலும், கலகத்தை அல்லது அரசாங்கத்திற்கு எதிரான குற்றமொன்றை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் பொய்யான அறிவிப்புகளை பரப்புதல் குற்றச்சாட்டில்,இணைய பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக, அவர்கள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.இதனால் இந்த பிரிவு 19 தவிர்க்கப்பட வேண்டும் என கூறப்பட்டாலும், அவ்வாறானதொன்று நடைபெறவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில், சபாநாயகரும்,அரசாங்கத்தின் தரப்பில் திருத்தம் செய்த தரப்பினரும் பாராளுமன்றத்தில் தவறிழைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.உயர்நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்ற வேண்டும் என அரசியலமைப்பு கூறினாலும்,அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.இத்தகைய 9 குறைபாடுகள் இதில் உள்ளன.இதனால்,சபாநாயகர் மீதான நம்பிக்கை முற்றாக இல்லாது போயுள்ளது. இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றை கூட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன் போது சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
வலையொளி இணைப்பு-