பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கமைய, இந்த சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், சிவில் உடையிலுள்ள பொலிஸார் அவர்கள் தொடர்பில் கண்காணிப்பதுடன், தமது கமராக்கள் மூலம் அதனை சாட்சியமாக பதிவு செய்வார்கள்.

இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதேவேளை, எவரேனும் ஒருவர், போலியான முறைப்பாடுகளை வழங்குவாராயின் அவருக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், போலி முறைப்பாடுகளின் ஊடாக எந்தவொரு நபரேனும் பாதிக்கப்படுவாராயின், அது விசாரணையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் தமக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply