முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு மேலதிக மருத்துவ சிகிச்சை அவசியம் என வைத்தியர்கள் பரிந்துரை வழங்கியுள்ளனர்.
இதன் காரணமாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹலிய ரம்புக்வெலவுக்கு தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைகள் வழங்கப்படும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சரின் மருத்துவ அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் அண்மையில் உத்தரவு வழங்கியிருந்தார்.
இவ்வாறு கைது செய்யப்படும் முன்னாள் அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறைச்சாலை வைத்தியசாலையின் ஊடாக சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், சிறைச்சாலை வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை நிலவுவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரே படுக்கையில் இரு நோயாளிகளை தங்க வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.