மிகவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகள், வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளின்போது அதிக தண்ணீர் அல்லது ஏனைய பானங்களை அருந்துமாறு குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வியர்வையுடன் அதிக சோடியம் வெளியேறுவதால், குறிப்பாக உப்பு கலந்த ஆரஞ்சு பழச்சாறு, இளநீர், கஞ்சி, சூப் போன்ற பானங்களை அதிகம் குடிப்பது மிகவும் பொருத்தமானதாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வயல்வெளிகளில் வேலை செய்பவர்கள், வீதிகளில் வேலை செய்பவர்கள், இராணுவத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் நீர்ச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் அதிகளவு தண்ணீர் அருந்துவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெயில் காலங்களில் வெளி பயணங்களில் ஈடுபடும்போது வெள்ளை நிற எளிமையான பருத்தி ஆடையை அணிந்து தொப்பி அணிவது முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளதாகவும், மது அருந்துவதால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்களில் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது இரண்டு பாட்டில் தண்ணீர் கொண்டு செல்வது அவசியம் என்றும், ஆசிரியர்கள் தொடர்ந்து தண்ணீர் குடிக்க குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்றார்.
மேலும், இந்த நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது மிகவும் பொருத்தமானது என்றும் குழந்தைகளை தண்ணீரில் இருக்க விடுவதும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காவிடில் உயிரிழப்புகள் பதிவாகும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.