இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான வனிந்து ஹசரங்கவிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்குச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. கடந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த போதும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் குழாமில் ஹசரங்க இணைக்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போது ஐசிசியினால் விதிக்கப்பட்ட தடையின் காரணமாக அவரால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க இயலாது.
போட்டியின் நடுவரின் முடிவுக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்துவது தொடர்பான வீரரின் நடத்தை விதி 2.8ஐ மீறியமையினால் ஹசரங்கவிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்படுவதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒரு நாள் போட்டியின் 37வது ஓவரின் போது, நடுவர் ஒருவரிடமிருந்து அவர் தொப்பியைப் பறித்த சம்பவத்திற்காகவே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், போட்டிக் கட்டணத்தில் 50% தண்டப்பணமாகச் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்காக ஹசரங்கவிற்கு மூன்று டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், அவருக்கு முன்னதாகவே 5 டீமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தமையால், மொத்த டிமெரிட் புள்ளிகள் 8ஆகக் காணப்படுகின்றது. ஆகவே, ஐசிசி விதிமுறைகளுக்கு அமைய இரு டெஸ்ட் போட்டிகள் அல்லது நான்கு ஒரு நாள் போட்டிகள் அல்லது நான்கு இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்கேற்க இயலாது. கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரின் போதும் ஹசரங்க போட்டியில் பங்கேற்றிருந்த நடுவர் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது விமர்சித்திருந்தார்.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான இலங்கை அணித் தலைவர் குசால் மென்டிசுக்கும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது நடுவரின் தீர்மானத்தை விமர்சித்தமைக்காக போட்டிக்காகப் பெற்றுக்கொள்ளும் பணத்திலிருந்து 50% தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று டிமெரிட் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஹசரங்க மற்றும் குசால் மென்டிஸ் தங்களுடைய குற்றங்களை ஒப்புக்கொண்டதுடன், வழங்கப்பட்ட தண்டனையையும் ஏற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஹசரங்கவினால் பங்கேற்க முடியாமை இலங்கை அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ள போதும், அவர் இம்முறை டெஸ்ட் குழாமில் பெயரிடப்பட்டிருக்கவில்லை என்றால், ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நான்கு போட்டிகளில் பங்கேற்றிருக்க இயலாத சூழ்நிலை உருவாகியிருக்கும்.