தோனியின் புதிய தோற்றம், கோலியின் மறுபிரவேசம் – வெற்றி யாருக்கு? 

இன்று ஆரம்பமாகவுள்ள 2024 ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்க்கொள்ளவுள்ளது.

அணியின் புதிய தலைவரான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் காணவுள்ள முதலாவது போட்டி இதுவாகும். இந்த போட்டி சென்னை எம்.எ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகின்றமை  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. 2008ம் ஆணடிற்கு பின்னர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை மண்ணில் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. 

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் தொடருக்கு பின்னர், முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக செய்யப்பட்ட சத்திர சிகிச்சைக்கு பின்னர்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவரான தோனி இன்று விளையாடவுள்ளார். சென்னை அணிக்கு இறுதி ஓவர்களின் போது பெரும் பலமாக இருந்த மதீஷ பத்திரன உபாதை காரணமாக இன்றைய போட்டி உட்பட சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்‌ஷனவும் உள்ளடக்கப்பட்டுள்ளார். 

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பொறுத்த வரையிலும், அவ் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி 2 மாத நீண்ட இடைவெளியின் பின்னர் இன்று விளையாடவுள்ளார். 

சென்னை எம்.எ. சிதம்பரம் மைதானத்தின் ஆடுகளம் கடந்த காலங்களை போன்று இன்றும் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  

Social Share

Leave a Reply