ருத்துராஜின் தலைமையில் சென்னைக்கு முதல் வெற்றி..!

2024ம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான இந்த போட்டியில் 18.4 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி இலக்கை கடந்தது. 

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று(22.03) நடைபெற்ற போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்ளூர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அணித்தலைவர் பப் டு பிளெசிஸ் 23 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற்று, அணிக்கு அதிரடியான ஆரம்பத்தை வழங்கினார். இருப்பினும் 5வது ஒவரில் முஸ்தபிஸூர் ரஹ்மானின் பந்து வீச்சில் பிளெசிஸ் ஆட்டமிழக்க, அதே ஒவரில் ரஜத் படிதார் ஓட்டங்கள் ஏதுவும் பெறாது ஆட்டமிழந்தார். 

பின்னர்  மக்ஸ்வெல் ஓட்டங்களின்றியும், கமரூன் கிரீன் 18 ஓட்டங்களுடனும், கோலி 21 ஓட்டங்களுடனும் ஆட்மிழக்க பெங்களூர் அணி தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடியின் அதிரடி ஆட்டத்தினால், பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.  

அனுஜ் ராவத் 25 பந்துகளில் 48 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். சென்னை அணி சார்பில் முஸ்தபிஸூர் ரஹ்மான் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி பெங்களுர் அணியை தடுமாற வைத்து போட்டி நாயகன் விருதை தனதாக்கினார்.

174 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

சென்னை அணியின் புதிய அணித் தலைவர் ருத்துராஜ் ஹைக்வூட் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ரச்சின் ரவீந்திர 15 பந்துகளில் 37 ஓட்டங்களையும் அஜிங்க்யா ரஹானே 19 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்று, அணிக்கு தேவையான ஆரம்பத்தை வழங்கினர். 

பின்னர், சூப்பர் சப்பாக(Super Sub) போட்டிக்குள் வந்த சிவம் துபே, ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து அணியை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு சென்றனர். துபே 28 பந்துகளில் 34 ஓட்டங்களையும், ஜடேஜா 17 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். 

பெங்களூர் அணி சார்பில் கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜின் தலைமைத்துவத்தின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றிப் பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply