19 வயதிற்கு உட்பட்ட இளையோர் மகளிர் மும்முனை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளன.
அவுஸ்ரேலியா அணி நேற்றைய(24) தினமும், இங்கிலாந்து அணி கடந்த 23ம் திகதியும் நாட்டை வந்தடைந்தன.
இலங்கை, இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியாவின் 19 வயதிற்கு உட்பட்ட இளையோர் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்குபற்றும் மும்முனை தொடர் எதிர்வரும் 28ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மூன்று அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது தொடர் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு அணியும் 4 இருபதுக்கு இருபது போட்டிகளிலும், 2 சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது.
இரண்டு தொடர்களின் வெற்றியாளர்கள், போட்டி வெற்றிகளுக்கமைய வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.
19 வயதிற்கு உட்பட்ட இளையோர் மகளிர் கிரிக்கெட் அணிக்கு தேவையான, சர்வதேச போட்டி அனுபவத்தை வழங்கும் நோக்கிலேயே இந்த தொடர் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.



