டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு குறித்த மாநாடொன்று இலங்கை அரசாங்கத்தின் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்மாநாட்டின் மூன்று அமர்வுகளிலும் அதனுடன் இணைந்த பக்க நிகழ்வுகளிலும் சேவைகள் வழங்கலுக்கான இயலுமை, உள்ளீர்ப்பினை வலுவாக்குவதன் ஊடாக சமூகங்களை வலுவூட்டல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதாரத்தை வளமாக்கல், ஆகியவற்றுக்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் நிலைமாற்றத்திற்கான ஆற்றல்களைப் பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டிருந்ததாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரை வழங்கிய அங்குரார்ப்பண அமர்வும் இம்மூன்று அமர்வுகளில் ஒன்றாக உள்ளடங்கியிருந்ததுடன், உரிய காலப்பகுதியில் இந்த மாநாட்டை ஒழுங்கமைத்தமைக்காக ஜனாதிபதி பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கை பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதில் DPI முக்கிய வினையூக்கியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்தியாவின் வெற்றிகரமான தந்திரோபாயங்களை உள்ளூரில் பயன்படுத்துவதன் மூலமாக வளர்ச்சியினை துரிதமாக்குவதற்கான சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவ்விடயத்தில் இந்தியாவுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தேவை குறித்தும் வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை இம்மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்திய இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அங்குரார்ப்பண அமர்வில் கருத்துரை வழங்கிய டிஜிட்டல் பொது உட்கடமைப்புக்கான மத்திய நிலையத்தின் இணைத் தலைவர் டாக்டர் பிரமோத் வர்மா ஆகியோர் இந்தியாவின் டிஜிட்டல் நிலை மாற்றங்கள் மற்றும் DPI & India Stack ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்றிருந்த ஏனைய இரு அமர்வுகளிலும் இந்தியா , இலங்கை மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த நிபுணர்களின் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. Accelerating Digital Sri Lanka & Unlocking the Digital Stack ஆகிய தலைப்புகளில் இக்கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
முதலாவது குழுநிலைக் கலந்துரையாடல், இலங்கையில் DPIஐ அமுலாக்குவதற்கான வழித்தடம் குறித்தும் அதன் பெறுபேறாக இ-ஆட்சிக் கட்டமைப்பினை வடிவமைத்தல் குறித்தும் கவனம் செலுத்தியதுடன் இந்த அமர்வு தொழில்நுட்பத் துறை இராஜாங்க அமைச்சர் கனக ஹேரதின் உரையுடன் ஆரம்பித்திருந்தது.
அடுத்த அமர்வில் அடிப்படை DPI முறைமைக்கு அப்பால், ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனங்களின் நேர்மறையான தோற்றப்பாடுகள் மீதான சிறப்பு கவனத்துடன் தொழில்நுட்பம், சந்தைகள் மற்றும் இணைப்பு தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது. இந்த அமர்வை பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஆரம்பித்துவைத்திருந்தார்.
அத்துடன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிபுணர்கள் இலங்கையில் உள்ள துறைசார் நிபுணர்களுடனும் ஏனைய முக்கிய தரப்பினருடனும் மேற்கொண்ட சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு பக்க நிகழ்வுகளால் இந்த மாநாடு மேலும் வலுவடைந்திருந்தது.
டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்ராட்டப் இந்தியா திட்டம் (Startup India Project) உள்ளிட்டவற்றை கையாளும் இந்திய அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் ஆறு செயற் குழுக்களுக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்புகள் இவற்றில் முக்கிய அம்சங்களாகும்.
இவ்வாறான பக்க நிகழ்வுகளின்போது ஆரம்பநிலை நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் எதிர்கால தொடர்புகளுக்கான அடித்தளங்களும் இங்கு நிறுவப்பட்டிருந்தது. “ஸ்டார்ட்டப் இந்தியா” திட்டக் குழுவானது இலங்கையின் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான திறன் விருத்தி செயற்பட்டறை ஒன்றை மார்ச் 26 மாலை ஒழுங்கமைத்திருந்ததுடன் இதில் பொருத்தமான மற்றும் பயனுள்ள சந்தைப்படுத்தல் பற்றிய இந்திய நிபுணர்களின் அமர்வுகளும் அடங்குகின்றன.
IIT Chennai நிறுவனத்தின் Incubator ‘Parvartak’ இன் தலைமை அதிகாரி அவர்கள் இலங்கையில் உள்ள முக்கிய ஆரம்ப நிலை நிறுவனங்களைச் சந்தித்து உரையாடினார். அத்துடன் NASSCOM தலைவர் ஜனாதிபதியை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2023 ஜூலையில் ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது டிஜிட்டல் களம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொலைநோக்கு ஆவணத்தின் அமுலாக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளின் மற்றொரு படியாகவே இந்த மாநாடு அமைந்துள்ளது.
இலங்கையின் பிரத்தியேக டிஜிட்டல் அடையாள (SL-UDI) திட்டத்தை ஆரம்பிப்பதற்கான இந்தியாவின் நன்கொடை உதவியானது, DPI மூலமான இலங்கையின் டிஜிட்டல் நிலைமாற்றத்தின் ஒரு முக்கிய அடித்தளமாகும். மக்களை மையப்படுத்திய சேவைகளை இலங்கை மக்களுக்கு வினைத்திறனுடன் வழங்குவதற்கான முன்னுரிமைகள் மற்றும் இலங்கையின் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் DPI அடிப்படையிலான வசதிகளை பயன்படுத்துவதற்கான உயரிய ஆற்றல்களையே இன்றைய பல்வேறு முயற்சிகள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.