இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 9வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 12 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
ராஜஸ்தான், ஜெய்பூர் மைதானத்தில் இன்று(28) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ராஜஸ்தான் அணி சார்பில் ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியான் பராக், இறுதியில் அதிரடியாக ஓட்டங்களை குவித்து, ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
ரியான் பராக், முதலாவது இன்னிங்ஸின் 20வது ஓவரின் போது 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தமை அணிக்கு பெரும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது.
மேலும், அஸ்வின் 19 பந்துகளில் 29 ஓட்டங்களையும், துருவ் ஜூரல் 12 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
186 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த டெல்லி அணிக்கு வர்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் அதிரடியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.
வர்னர் 34 பந்துகளில் 49 ஓட்டங்களையும் மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இறுதி வரை முயற்சித்த போதும் டெல்லி அணியை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு செல்ல இயலவில்லை.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. அதன்படி, ராஜஸ்தான் அணி 12 ஓட்டங்களினால் இந்த போட்டியில் வெற்றிப் பெற்றது.
ராஜஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் நன்ரே பர்கர் மற்றும் சலால் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ரியான் பராக் தெரிவு செய்யப்பட்டார்.