பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இமலாய இலக்கு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

போட்டியின் 4ம் நாளான இன்று, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியுஸ் 56 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 34 ஓட்டங்களையும் மற்றும் பிரபாத் ஜயசூரிய 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ஹசன் 4 விக்கெட்டுகளையும் கலீட் அஹமட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது, போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 44 ஓட்டங்களுடனும் தைஜுல் இஸ்லாம் 10 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். 

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய மற்றும் கமிந்து மென்டிஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். 

நாளை(03) நடைபெறவுள்ள போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தின் போது, பங்களாதேஷ் அணிக்கு மூன்று விக்கெட்டுகள் மாத்திரம் கையிருப்பில் உள்ள நிலையில், வெற்றி பெறுவதற்கு 243 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். 

இதேவேளை, பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் விலகியுள்ளார்.

தினேஷ் சந்திமாலின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசர நிலையின் காரணமாக அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போட்டியின் முதலாம் நாள் விபரம்,  

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி சொட்டாகிராமில் கடந்த 30ம் திகதி ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இலங்கை அணிக்கு நிஷான் மதுஷ்க மற்றும் திமுத் கருணாரத்ன இருவரும் முதல் விக்கெட்டிற்காக 96 ஓட்டங்களை இணைப்பட்டமாக பெற்றுக் கொடுத்தனர். 

நிஷான் மதுஷ்க 57 ஓட்டங்களுடனும் திமுத் கருணாரத்ன 86 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசால் மென்டிஸ் 7 ஓட்டங்களினால் சதத்தை தவறவிட்டிருந்தார். குசால் 93 ஓட்டங்களுடனும், அஞ்சலோ மெத்தியுஸ் 23 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 314 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

போட்டியின் இரண்டாம் நாள் விபரம், 

314 ஓட்டங்களுடன் இரண்டாவது நாளை ஆரம்பித்த இலங்கை அணி, முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 531 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில், எந்தவொரு வீரரும் சதம் பெறாமல் அணியொன்று பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். 

இலங்கை அணி சார்பில் இன்றைய தினம் கமிந்து மென்டிஸ் 92 ஓட்டங்களையும், அணி தலைவர் தனஞ்சய டி சில்வா 70 ஓட்டங்களையும் மற்றும் தினேஷ் சந்திமல் 59 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

இந்த இன்னிங்ஸில் 92 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட கமிந்து மென்டிஸ், டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் சதங்களை பெறும் வாய்ப்பினை 8 ஓட்டங்களினால் தவறவிட்டிருந்தார். கமிந்து மென்டிஸ், பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது போட்டியிலும் இரு இன்னிங்ஸ்களின் போதும் சதம் கடந்திருந்தார். 

பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்மூத் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர். 

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

போட்டியின் மூன்றாம் நாள் விபரம்,

முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வந்த பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார மற்றும் பிரபாத் ஜயசூரிய தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.  

பங்களாதேஷ் அணி சார்பில் சகிர் ஹசன் 54 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டார். 

353 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய இன்றைய நாள் ஆட்டநேர முடிவின் போது 6 விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியுஸ் 39 ஓட்டங்களுடனும், பிரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். 

பங்களாதேஷ் அணி சார்பில் பந்துவீச்சில் ஹசன் 4 விக்கெட்டுகளையும் கலீட் அஹமட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். 

போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நாளை(03) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version