முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்த இளம் வீரர் – DC vs LSG 

முதல் போட்டியிலேயே அரைசதம் கடந்த இளம் வீரர் – DC vs LSG இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் லக்னோவ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. 

லக்னோவில் இன்று(12) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோவ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 

அதன்படி, லக்னோவ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

லக்னோவ் அணி சார்பில் ஆயுஷ் பதோனி 55 ஓட்டங்களையும், அணி தலைவர் கே.எல்.ராகுல் 39 ஓட்டங்களையும் மற்றும் அர்ஷத் கான் 20 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

டெல்லி அணி சார்பில் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், கலீல் அஹமட் 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக் கொண்டனர். 

போட்டியின் 8வது ஓவரின் போது குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை தவறவிட்டிருந்தார். 

168 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

டெல்லி அணி சார்பில் ஜேக் ஃப்ரேசர் 55 ஓட்டங்களையும், அணி தலைவர் ரிஷப் பாண்ட் 41 ஓட்டங்களையும், பிரித்வி ஷா 32 ஓட்டங்களையும் மற்றும் டிரிஸ்டன் சடப்ஸ் 9 பந்துகளில் 15 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

அவுஸ்ரேலியாவை சேரந்த 22 வயதான ஜேக் ஃப்ரேசர் தன்னுடைய முதல் ஐ.பி.எல் போட்டியிலேயே அரை சதம் கடந்தார். 

லக்னோவ் அணி சார்பில் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் மற்றும் யாஷ் தாகூர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக்கொண்டனர். 

இதன்படி, இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால்  வெற்றியீட்டியது. 

போட்டியின் ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவ் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் இறுதி இடத்திலிருந்த டெல்லி அணி 4 புள்ளிகளுடன் 9ம் இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், லக்னோவ் அணி தொடர்ந்தும் 6 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது. 

இதேவேளை,  இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நாளைய(13) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

சண்டிகர், முல்லன்பூர் மைதானத்தில் நாளை(12) இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply