சுயபொருளாதார மேம்பாடும், சமத்துவ சக வாழ்வும், தடைகளற்ற வழிபாடுகளும் எம்தேசமெங்கும் பரவிட பிறந்திருக்கும் குரோதி வருடம் வழி வகை செய்யட்டும், என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது தமிழ் – சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களிடையே வளர்க்கப்பட்ட சுயநல அரசியல் விரோதங்களின் விளைவே இன்று எமது மக்கள் எதிர்கொள்ளும் அவலமிகு வாழ்வாக விளைந்து கிடக்கினறது.
இந்த உண்மையை உணர்ந்து கொள்ளாதோரும், தமது அரசியல் நலன்களுக்கு இவ்வாறான விரோத நிலை தொடர வேண்டும் என்ற விருப்புக் கொண்டோருமே இன்றும் எம்மத்தியில் இடைவெளிகளையும் , முரண்பாடுகளையும் வளர்த்துக் கொண்டு வருகின்றனர்.
ஆனால் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமது வழிமுறையும் , அணுகுமுறையும் அதிலிருந்து வித்தியாசமானது,
எமது பிரதேசங்களில் பயன்பாடற்று கிடக்கும் வளங்களை, எமது மக்களின் இருப்பிற்கோ, சூழலுக்கோ சேதாரம் ஏற்படாதவாறு பயன்படுத்தி, எமது மக்களை சுயபொருளாதாரத்தின் ஊடாக எம் தேசமெங்கும் வலுப்படுத்துவதே எமது இலக்காகும்.
அந்த இலக்கு நோக்கிய பயணத்தின் சாதனைப் பட்டியல் மிக நீளமானது. அதன்தொடர்ச்சியாக, மனிதர்கள் வாழ தகுதியற்ற பொட்டல்வெளியை பொன்விளையும் பூமியாக மாற்ற புதிய முயற்சிகள் செய்கின்றோம். ஆய்வுகள் சரியென்றால் அதுவும் சாத்தியமாகும். பொன்னாவெளிக்கும் ஒரு புதுப்பொலிவு பிறக்கும்.
அதேபோன்று, எமது மக்களின் காணிகளும், புனிதமிகு வழிபாட்டு இடங்களும் மக்களிடம் சேர வேண்டும் என்பதிலும் நடைமுறை சாத்திய வழிமுறையில் நகர்வொன்றைச் செய்கின்றோம்.
இவ்வாறு எமது தேசத்தை கடந்தகால பின்னடைவுகளிருந்து நம்பிக்கையின் கரம் பிடித்து நல்வழி நடத்திச் செல்லும் நல்லாண்டாக பிறக்கும் குரோதி வருடம் அமைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.