சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – RR vs KKR

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

கொல்கத்தாவில் இன்று(16) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 109 ஓட்டங்களையும், ரகுவன்ஷி 30 ஓட்டங்களையும் மற்றும் ரிங்கு சிங் 9 பந்துகளில் 20 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

ராஜஸ்தான் அணி சார்பில் அவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா இரண்டு விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சலால் தலா ஒரு விக்கெட்டினையும்  பெற்றுக்கொண்டனர். 

224 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. 

ஐ.பி.எல் தொடரில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அணியொன்று அதிகூடிய வெற்றி இலக்கை கடந்த சந்தர்ப்பம் இதுவாகும். 

ராஜஸ்தான் அணி சார்பில் ஜோஸ் பட்லர் 107 ஓட்டங்களையும், ரியான் பராக் 34 ஓட்டங்களையும் மற்றும் ரோவ்மன் பவுல் 26 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

கொல்கத்தா அணி சார்பில் பந்துவீச்சில் ஹர்ஷித் ரானா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா இரண்டு விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர். 

இதன்படி, இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியது. போட்டியின் ஆட்ட நாயகனாக ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய ராஜஸ்தான் அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதல் இடத்திலும், கொல்கத்தா அணி 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. 

இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நாளைய(17) போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

அகமதாபாத்தில் நாளை(17) இரவு 7.30 மணிக்கு  குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.  

Social Share

Leave a Reply