மாலைத்தீவு தேர்தலில் சீன ஆதரவுக் கட்சி வெற்றி

மாலைத்தீவின் 20வது பாராளுமன்ற தேர்தலில், மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ்(PNC), ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 70 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றி, தேர்தல் வெற்றியை உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மாலைத்தீவில் நேற்று(21.04) நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்  93 ஆசனங்களுக்கு 326 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். 

200,000 இலச்சத்திற்கு அதிகமான வாக்காளர்கள் இம்முறை மாலைத்தீவு பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்திருந்தனர். 

தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசுடன், மாலைத்தீவு ஜனநாயக கட்சி, ஜும்ஹூரி கட்சி, மாலைத்தீவு அபிவிருத்திக் கூட்டணி, அதாலத் கட்சி மற்றும் மாலைத்தீவு தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் 130 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், சீனாவிற்கு சார்பான மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ்(PNC), ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 70 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளது. 

ஏனைய கட்சிகளின் விபரங்கள்  பின்வருமாறு, 

மாலைத்தீவு ஜனநாயக கட்சி – 12 ஆசனங்கள், சுயேட்சை வேட்பாளர்கள் – 7 ஆசனங்கள், மாலைத்தீவு  அபிவிருத்திக் கூட்டணி – 2  ஆசனங்கள், ஜும்ஹூரி கட்சி – 1 ஆசனம் மற்றும் மாலைத்தீவு தேசிய கட்சி – 1 ஆசனம்

இந்தியாவிற்கு சார்பான மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சி, கடந்த தேர்தலில் 65 ஆசனங்களை கைப்பற்றியிருந்த போதும் இம்முறை 15ற்கும் குறைவான ஆசனங்களை கைப்பற்றியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

தேர்தல் முடிவுகள், மாலைத்தீவு அரசியல் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது, மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி நாட்டினுடைய சட்டவாக்க செயற்பாடுகளில் பாரிய செல்வாக்கைப் பெற்றுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version